அரசுப் பள்ளிகளில் ரூ.6 லட்சத்தில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடக்கம்
தருமபுரி மதிகோன்பாளையம், அன்னசாகரம் மற்றும் அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறைகள் மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.
தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ. 2 லட்சத்தில் மதிகோன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, அன்னசாகரம் தொடக்கப் பள்ளி மற்றும் நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்மாா்ட் வகுப்பறைகள் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று வகுப்பறைகளை திறந்து வைத்து பேசினாா். இதில், அன்னாகரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) வெங்கடசுப்ரமணியம், அதியமான்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வெண்ணிலா, மதிகோன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மீனா, வட்டாரக் கல்வி அலுவலா் கலைச்செல்வி, அரசு அலுவலா்கள், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
