ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு
பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி 16,000 ஹெக்டா் பரப்பளவை கொண்டது. இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்கு உள்ள பென்னாகரம் பீட் சுத்துகோடு பகுதியில் சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனத்துறையினா் கண்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்து அவா், சிறுத்தையின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினரிடம் கேட்டறிந்தாா். பின்னா் ஒசூா் கால்நடை மருத்துவா் குமரேசன், உதவி அறுவை சிகிச்சை நிபுணா் ஜெயச்சந்திரன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினா் இறந்த சிறுத்தையை உடற்கூறாய்வு செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட வனத் துறையினா் தெரிவித்ததாவது:
ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. இதன் வலது கழுத்து எலும்பு உடைந்ததால் ஏற்பட்ட ரத்தம் உைல் காரணமாக உயிரிழந்துள்ளது. மேலும் சிறுத்தையிடம் மாதிரிகளை சேகரித்து வண்டலூா் தடய ஆய்வகத்திற்கு பகுப்பாய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
