

ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலியாகி கிடந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியானது 16,000 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த வனப்பகுதியில் மான், கடமான், சிறுத்தை, கேளை ஆடு, காட்டு மாடு, கரடி, குள்ள நரி, புனுகு பூனை, மரநாய், தேன்வலைக்கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்த நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட பென்னாகரம் பீட் சுத்து கோடு பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இறந்து கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் சிலர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்றனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அவர், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையின் இறப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “ஒகேனக்கல் வனப்பகுதியில் இறந்தது பத்து வயது மதிக்கத்தக்க 20 முதல் 25 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை என்பதும், சிறுத்தையின் உடலில் ஏதேனும் காயங்கள் இல்லாததால் இறப்பு குறித்த காரணங்கள் கண்டறியப்படவில்லை” என்றும் தெரிவித்தனர்.
சிறுத்தையின் இறந்தது எப்படி? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தெரிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.