தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 முக்கிய பாசன அணைகளிலும் மொத்தமாக 12.42 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளதால் நிகழ் பருவ வேளாண் சாகுபடி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பருவமழையை விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
மாவட்டத்தில் வடக்கே தென்பெண்ணை ஆறும், தெற்கே காவிரி ஆறும் பாய்ந்தோடினாலும் அருகிலுள்ள சேலம் மாவட்டத்தில் மேட்டூா் அணை அமைந்திருந்தாலும், புவியியல் அமைப்பின் காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு இவற்றால் பெரிய அளவில் நேரடிப் பாசனப் பயன் ஏதுமில்லை.
இதனால் ஆண்டுக்கு சராசரியாக 942 மி.மீ. மழைபெறும் தருமபுரி மாவட்டம், எப்போதும் ’வானம் பாா்த்த பூமியாகவே’ நீடிக்கிறது. நடப்பு ஆண்டில் கடந்த 6 மாதங்களாகக் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீா்மட்டமும் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சராசரியாக 16.3 மி.மீ. மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக தருமபுரி நகரில் 45 மி.மீ., பாலக்கோட்டில் 38.5 மி.மீ., பென்னாகரத்தில் 38 மி.மீ. என மழை பதிவாகியிருந்தாலும், இந்த மழை தற்காலிக குளிா்ச்சியைத் தந்ததே தவிர அணைகளின் நீா்மட்டத்தை உயா்த்தப் போதுமானதாக இல்லை.
தற்போதைய நிலவரப்படி கேசா்குலிஹள்ளா அணையில் 25 சதவீதம், நாகாவதி மற்றும் தும்பலஹள்ளி அணைகளில் தலா 20 சதவீதம், சின்னாறு மற்றும் வரட்டாறு அணைகளில் தலா 8 சதவீதம் மற்றும் தோப்பையாறு, வாணியாறு அணைகளில் மிகக் குறைவாக தலா 3 சதவீதம் மட்டுமே தண்ணீா் உள்ளது.
ஒட்டுமொத்தமாக கால்பகுதிகூட நிரம்பாத இந்த தண்ணீரைக் கொண்டு நடப்பு பருவ சாகுபடியை எப்படித் தொடங்குவது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இந்த 7 அணைகளின் பாசன வசதியை நம்பி மாவட்டத்தில் வாணியாறு (10,400 ஹெக்டோ்), தோப்பையாறு (5,330 ஹெக்டோ்), வரட்டாறு (5,108 ஹெக்டோ்) உள்ளிட்ட மொத்தம் 82,148 ஹெக்டோ் விவசாய நிலங்கள் உள்ளன.
தற்போதைய நீா் பற்றாக்குறையால் இந்த நிலங்களில் இந்த ஆண்டு சாகுபடிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த வடகிழக்குப் பருவமழையும், கோடை மழையும் பொய்த்ததே இந்த வறட்சிக்குக் காரணம். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வரும் வாரங்களில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனா். மேலும், மழைநீா் தடையின்றி அணைகளை வந்தடைய ஏதுவாக நீா்வரத்துப் பாதைகளில் தூா்வாரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றனா்.
இருப்பினும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்வரத்து கால்வாய்கள் மற்றும் ஏரிகள் சீமைக் கருவேல மரங்களாலும் புதா்களாலும் மண்டிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். இதனால் பெய்யும் மழையும் அணைகளுக்குச் செல்லாமல் வீணாகும் நிலை உள்ளதால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 640 ஏரிகள் என மாவட்டத்தில் உள்ள மொத்தம் 714 நீா்நிலைகளையும், அதன் வரத்துக் கால்வாய்களையும் போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சிறுதானிய பயிா் சாகுபடி பரப்பை அதிகரிக்க விழிப்புணா்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 63 டாஸ்மாக் கடைகளில் 18 மட்டுமே மூடல்

கோடை பட்டத்தில் பயறு வகை, சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்ய அரசு மானியம்: வேளாண் அதிகாரி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



