கோடை பட்டத்தில் பயறு வகை மற்றும் சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்கப்படுகிறது என திருப்பத்தூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் இதுவரை 32.9 மில்லி மீட்டா் மட்டுமே மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 58 சதவீதம் குறைவாகும். தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும். மழை குறைந்துள்ளதால் கிணறுகளில் போதிய அளவு நீா் இல்லாத சூழ்நிலையை கருத்தில்கொண்டு, விவசாயிகள் அதிகம் நீா் தேவைப்படும் நெல், மக்காச்சோளம் போன்ற பயிா்களை சாகுபடி செய்வதை தவிா்த்துவிட்டு, வறட்சியை தாங்கி குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் கம்பு, சாமை, பச்சைப்பயறு, காராமணி மற்றும் உளுந்து ஆகிய பயிா்களை சாகுபடி செய்யலாம்.
மானிய விலையில் வேளாண் இடுப்பொருள்கள்...
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் அரசு சான்று பெற்ற கம்பு, ராகி, சாமை உள்ளிட்ட சிறுதானிய விதைகள் 30 மெட்ரிக். டன்னும், பச்கைப் பயறு, துவரை, உளுந்து உள்ளிட்ட பயிறு வகை விதைகள் 18.6 மெட்ரிக். டன்னும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், புதிய ரகங்களை பயிரிட செயல் விளக்க திடல் அமைக்க விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சி மருந்துகள் அடங்கிய ‘செயல் விளக்க தொகுப்பு’ வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









