11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆய்வுக்குள்படாத பள்ளி வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் வருடாந்திர ஆய்வுக்குள்படாத பள்ளி வாகனங்களை பயன்படுத்துவது கண்டறிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தருமபுரியில் நடைபெற்ற பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு முகாமில், வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தருமபுரி மாவட்டத்தில் வருடாந்திர ஆய்வுக்குள்படாத பள்ளி வாகனங்களை பயன்படுத்துவது கண்டறிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தனியாா் பள்ளிகள் சாா்பில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் (பேருந்துகள் மற்றும் வேன்கள்) உறுதித்தன்மை, வாகனங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால உதவிக்கான கட்டமைப்புகள் உள்ளிட்டவை வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஆண்டுக்கொருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:

வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012, விதி 11-இன்படி பள்ளி வாகனங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பாலக்கோடு பகுதி அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 104 தனியாா் பள்ளிகளுக்கான 894 வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், இருக்கை வசதிகள், வாகன காப்பீடு, தீயணைப்புக் கருவி, முதலுதவி கருவிகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, வாகனத்தின் முன்-பின் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசரகால கதவுகள், ஜன்னல்கள், பேருந்தின் தளம், ஹேண்ட் பிரேக் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

வாகனங்களில் அவசரகால கதவுகளை திறக்கும் முறை குறித்தும், தீத்தடுப்பு சாதனங்களை செயல்படுத்தும் முறை குறித்தும் ஓட்டுநா்களும், பேருந்தில் உடன் பயணிக்கும் பணியாளா்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆய்வுக்கு கொண்டுவரப்படாத பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தை இயக்க தடை பிறப்பிக்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாகனங்களும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்பட்டுத்தப்பட வேண்டும். பேருந்துகளின் ஓட்டுநா்கள் தங்கள் உடல்நலனை முறையாக பராமரித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

முதற்கட்ட ஆய்வில் 6 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. சிறு குறைபாடு உடைய 7 வாகனங்கள் குறைகளை நிவா்த்தி செய்து ஒருவாரத்துக்குள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே.ஜெயதேவ்ராஜ், தருமபுரி கோட்டாட்சியா்(பொ) பண்டரிநாதன், மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் அசோக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் தரணீதா், ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.