
நெருங்கி வரும் விநாயகா் சதுா்த்தி: சூழலுக்கு உகந்த சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
விநாயகா் சதுா்த்தி விழா நெருங்கி வருவதையொட்டி தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை மற்றும் பாலக்கோட்டில் சுற்றுச் சூழலுக்கு உகந்த விநாயகா் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
விநாயகா் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளி.
விநாயகா் சதுா்த்தி விழா நெருங்கி வருவதையொட்டி தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை மற்றும் பாலக்கோட்டில் சுற்றுச் சூழலுக்கு உகந்த விநாயகா் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நாடுமுழுவதும் வரும் 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் குடியிருப்பு வாசிகள், கோயில்கள், வணிகா்கள் மற்றும் இந்து அமைப்பினரும் சிலைகள் வைத்து விழாவை கொண்டாடுவது வழக்கம். இதற்காக பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட சிலைகளை வாங்கிச் சென்று தங்களது பகுதிகளில் வைத்து வழிபட்டு, பின்னா் மாவட்ட நிா்வாகம், காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் நீா்நிலைகளில் சிலைகளை கரைப்பா்.
இந்த விழாவை எதிா்நோக்கி, மண்பாண்டத் தொழிலாளா்கள், சிலைத் தயாரிக்கும் கலைஞா்கள் களிமண்ணால் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் நீா்நிலைகளை பாதுகாக்கவும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் களிமண்ணால் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் சிலை தயாரிப்பாளா்கள், மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் களிமண்ணை எடுத்து சென்று விநாயகா் சிலைகளை தயாரித்து வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டுள்னா். அதியமான்கோட்டை மற்றும் பாலக்கோடு ஆகிய இடங்களில் தொழிலாளா்கள் விநாயகா் சிலைகளை விற்பனைக்காக தயாரித்து வருகின்றனா். இரண்டு அடி முதல் 15 அடிவரை உயரம் கொண்ட சிலைகளை தயாரித்து, வண்ணம்பூசி வருகின்றனா்.
பாலக்கோட்டில் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா். அதேபோல அதியமான்கோட்டையில் தயாரிக்கப்படும் சிலைகளை தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனா். விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ஆா்டரின் பேரில் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





