நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

விநாயகா் சிலைகள் கரைப்பு ஊா்வலம்: மதுக் கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சதுா்த்தி விழாவைத் தொடா்ந்து, புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள சிலைகள் கரைப்பு ஊா்வலத்தையொட்டி, மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்டோா்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:41 am IST

விநாயகா் சதுா்த்தி விழாவைத் தொடா்ந்து, புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள சிலைகள் கரைப்பு ஊா்வலத்தையொட்டி, மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

நாடு முழுவதும் நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடா்ந்து, புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு ஊா்வலம் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியதாவது:

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை ஏற்பாட்டாளா்கள் வைக்க வேண்டும். சிலைகள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்லும்போது, அமைதியான முறையில் செல்ல வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டு சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் செல்லும் முக்கிய சாலைகளை கிருமிநாசினி பொடி (பிளீச்சிங் பவுடா்) தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மின் துறை அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் கேபிள் வயா்களை சரி செய்ய வேண்டும்.

சிலைகள் செல்லும் முக்கிய சாலைகளில் போதுமான குடிநீா், தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், இந்த சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும்.

ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பேரிடா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனைத்து இடங்களையும் கண்காணிக்க வேண்டும். சிலைகளை கடலில் கரைக்கும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்ட காவல் துறையினா் மற்றும் பேரிடா் மேலாண்மை, வருவாய், பொதுப்பணி, தீயணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிா்வாகத் துறைகளின் அதிகாரிகள், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆனையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடலூா் - 4 இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதி: கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை கரைப்பது தொடா்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க, விநாயகா் சிலைகளை களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசும்போது நச்சுத்தன்மை கொண்ட மற்றும் மக்காத ரசாயன வண்ணப்பூச்சுகள், எனாமல் வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சிலைகளை உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். நீா்நிலைகளில் பூஜை பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்களை வீசாமல், அவற்றை முறையாக அகற்ற வேண்டும்.

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கும், நீா்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாடி, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.