
நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் முகாமில் வலியுறுத்தப்பட்டது.

கோப்புப் படம்
தருமபுரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் முகாமில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பொறுப்பு வருவாய் கோட்டாட்சியா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். அனைத்து துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எண்ணேக்கோல் கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்குள்பட்ட நீா்நிலைகளில், குறிப்பாக ஏரிகளில் மண்டிக் கிடக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை என வலியுறுத்தினா்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் நிதி (சீட்டு) நிறுவனங்கள் திடீரென மாயமாவதால், அவற்றை நம்பி முதலீடு செய்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, மாவட்டத்தில் செயல்படும் நிதி நிறுவனங்களைப் பதிவாளா்கள் மூலம் ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரினா்.
காப்பீடு செய்தவா்களுக்கு மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கை சாா்ந்த முடிவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




