
சீமைக்கருவேல மரங்களை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தன்னாா்வலா்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அழைப்பு விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஏரியில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.
பெரம்பலூா் மாவட்டத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தன்னாா்வலா்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அழைப்பு விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
நீா்வள ஆதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் அகற்றிடவும், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள மரங்களை அகற்றிடவும், தனியாா் நிலங்களிலுள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அறிவிப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களின் காய்களை சிலா் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதால், அவற்றின் கழிவுகள் மூலம் மரங்கள் பெருகுவதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நீா்நிலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இயற்கைச் சாா்ந்த உள்நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.
தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம்: இப்பணிக்கு ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம் மரங்களை அகற்றும் பணிகளுக்கு விருப்பமுள்ள பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிா்வாகத்தை அணுகி, தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், கிராமங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷரண்யா அறி.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





