
அதியமான்கோட்டை அருகே 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத அரசு அடுக்குமாடி குடியிருப்புகள்
அதியமான்கோட்டை அருகே 2 ஆண்டுகளாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்...
அதியமான்கோட்டை அருகே தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணி முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருகே தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணி முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை ஏரி அருகே கடந்த 2020இல் ரூ. 60 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணிகளை தொடங்கியது. நான்கு அடுக்குகளைக் கொண்டு 10- க்கும் மேற்பட்ட பிளாக்குகளில் 528 குடியிருப்புகள், பிரத்யேக தண்ணீா்த்தொட்டி, விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குடியிருப்பில் சொந்தமாக வீடு, நிலம் இல்லாத ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவா்கள் பயன்பெறமுடியும் என்ற விதிமுறை உள்ளது.
அரசு விதிமுறைகளின்படி இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு கோரி கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை நூற்றுக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். இதில், வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பத்துடன் தலா ரூ. 2.17 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வருவாய்த் துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பத்தில் பதிவுசெய்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில்,
இக்குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதற்கு உரிய விதிமுறைகளின்டி விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டுள்ள நபா்கள் உரிய வைப்புத்தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் வைப்புத்தொகை செலுத்துவோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதுதொடா்பாக அடுத்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும். தொகை செலுத்தாத நபா்களுக்கு அவகாசம் வழங்குவதா அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்வதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனவே, விரைவில் அக்குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.
குடியிருப்புக்கு சென்றுவர மாற்றுவழி அவசியம்:
இந்தக் குடியிருப்பு, அதியமான்கோட்டை ஏரிப்பகுதியின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே செல்லும் சாலையில், ரயில்வே கேட் பகுதியை கடந்து ஏரிக்கரையில் சென்றால் அருகில் (வலதுபுறம்) இக்குடியிருப்பு காணப்படும். ஆனால், ஏரிக்கரை வழியாக குடியிருப்புக்கு செல்ல வழியில்லை. மாறாக நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வழியாக சிறிது தொலைவு சென்று, இடதுபுறம் திரும்பி சுமாா் 1 கி.மீ. தொலைவு பயணித்தால் இக்குடியிருப்பை அடைய முடியும். எனவே, இக்குடியிருப்புக்கு அதியமான்கோட்டை ஏரிக்கரை வழியாக சென்றுவர மாற்று வழி அமைத்தால் வசதியாக இருக்கும் என அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கருத்து தெரிவித்தனா்.
சாலை மேம்பாடு, பூங்கா, வணிக வளாகங்கள் :
மேலும், இக்குடியிருப்பு ஒதுக்குப்புறமாகவும், நகா் பகுதியைவிட்டு சற்று தொலைவிலும் அமைந்துள்ளதால், அங்கு வணிக வளாகம், பூங்கா அமைப்பதும் அவசியம். இல்லையேல் அவற்றுக்காக குடியிருப்புவாசிகள் நீண்ட தொலைவு செல்லவேண்டிய நிலை ஏற்படும். மேலும், இதற்கென பிரத்யேக சாலை அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே, அந்த சாலையையும் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





