
"தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை'
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சி.கதிரவன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சி.கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 14,41,110 வாக்காளர்கள் உள்ளனர். 1,758 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மே மாதம் 16-ஆம் தேதியன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதியிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பறக்கும் படைகளும், விடியோ கண்காணிப்புக் குழுக்களும், நிலைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல அனைத்து பொது இடங்களிலும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பதாகைகள், சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறிந்தால், அதை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு கட்டணமில்லாத தொலைபேசி எண் 18004257076 அல்லது 04343-232226 மற்றும் 8300023600 ஆகிய எண்களுக்குத் தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.5) நடைபெற உள்ளது. அதே போல ஒவ்வொரு தொகுதி வாரியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் பறக்கும் படையினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்.
அதே போல் அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைத்துள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், வீடுகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்திட, அந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு உடனே வந்ததையடுத்து அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதற்காக வாகனங்கள் தீவிரமாக சோதனை நடத்தப்பட உள்ளது. எனவே பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 557 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். அவர்களில், 460 பேர் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் உடனடியாக துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் அந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் 128 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும், 68 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் மந்திராசலம், காவல் கண்காணிப்பாளர் வீரராகவன், தேர்தல் பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






