
"4 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்'
இந்தியாவில் 4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என சேலம் மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையர் திருமலைக்குமார் தெரிவித்தார்.
இந்தியாவில் 4 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என சேலம் மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையர் திருமலைக்குமார் தெரிவித்தார்.
ஒசூர் வருமான வரித்துறை சார்பில் அதிக வருமான வரியைச் செலுத்தியவர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 25 கோடி வாக்காளர்கள் பான் அட்டை பெற்று வருமான வரி செலுத்த வேண்டியவர்கள். ஆனால், 4 கோடி வாக்காளர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். அவர்களும் கூட 15 சதவீதத்துக்கு மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்.
அவர்கள்தான் இந்தியாவின் வளர்ச்சியில் பங்குபெறுகின்றனர்.
சேலம் மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தும் பகுதியாக ஒசூர் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழில்சாலைகள் உள்ளன. ஒசூர் வருமான வரி அலுவலகம் மூலம் ஆண்டுக்கு ரூ.75 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் வருமான வரித்துறை அலுவலகம் இல்லாத மாவட்டமான தருமபுரி, திருவாரூர் மாவட்டங்களில் வருமான வரித்துறை அலுவலகம் விரைவில் தொடங்கப்படும். இந்தியாவில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் வருமான வரித்துறை அலுவலகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு வருமான வரி மூலம் ரூ.7.5 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரும் வருமான வரி செலுத்தி விவசாயத் துறையை மேம்படுத்த உதவ வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ஒசூரில் அதிக வருமான வரி செலுத்திய லுக் இந்தியா நிறுவனம், ஏவிஎஸ் நிறுவனம், தருமபுரி தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி ஆகிய நிறுவனங்களுக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விழாவில், ஒசூர் வருமான வரித்துறை ஆணையாளர் சுகுமார், வருமான வரித்துறை அலுவலர்கள் அனு, கிருஷ்ணகிரி வருமான வரித்துறை அலுவலர் ஆலு பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






