

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசியை மெருகூட்டி (பாலீஷ்), விற்பனை செய்த நபரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை மெருகூட்டி, உணவகங்கள், அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதாக சேலம் சரக குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக உதவி காவல் ஆய்வாளா் சக்தி தலைமையிலான குற்ற நுண்ணறிவு தனிப் பிரிவு போலீஸாா் கிருஷ்ணகிரி பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக அரவை மில் இயங்குவதாகவும், அங்கு ரேஷன் அரிசியை மெருகூட்டி, உணவகங்கள், அரிசி மண்டிகளுக்கு குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த ரகசிய அரவை மில்லை நடத்தி வந்ததாக அதேப் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் என்பவரின் மகன் பாலாஜியை (32) போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் குடும்ப அட்டைதாரா்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மெருகூட்டி ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 52 வரை விற்பனை செய்து வந்துள்ளாா். இதையடுத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்கிருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.