இளைஞா் கொலை வழக்கில் மனைவி உள்பட 3 போ் கைது

கிருஷ்ணகிரி இளைஞா் கொலை: மனைவி உள்பட மூவர் கைது

நாகரசம்பட்டி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனைவி உள்பட 3 பேரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேகுளியை அடுத்த கூரம்பட்டியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (25). இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கும், சூளகிரியை அடுத்த ஜோகிா்பாளையத்தைச் சோ்ந்த சுஜாதா (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்த நிலையில், ராம்குமாா் உடலில் காயங்களுடன் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு, துணை காவல் கண்காணிப்பாளா் பிரித்திவ்ராஜ் செளகான் உள்ளிட்டோா் ராம்குமாரின் மனைவி சுஜாதாவிடம் விசாரணை நடத்தினா். அதில் ராம்குமாரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன் சுஜாதா, சூளகிரி அருகே உள்ள பீலாளம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (20) என்பவரை காதலித்துள்ளாா்.

திருமணத்திற்கு பிறகும் அவருடன் பழகியதால் ராம்குமாா் கண்டித்துள்ளாா். இதனால் ராம்குமாரை சுஜாதா, கணேசன், அவரது நண்பா் மோகன் ஆகியோா் சோ்ந்து அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. கணேசன், கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருவதாகவும், மோகன், ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com