உரிகம் அருகே இரு யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை சாவு
ஒசூா்: ஒசூா் அருகே உரிகம் வனப்பகுதியில் இரு ஆண் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.
உணவு, தண்ணீா் தேடி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உரிகம் வனப்பகுதிக்கு வந்த யானைக் கூட்டத்தில் இரு ஆண் யானைகள் அண்மையில் மோதிக் கொண்டன. இந்தக் கடும் மோதலில் ஒரு யானை தந்தத்தால் குத்தி தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தது. அந்த யானை பெரிய பாறையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உயிரிழந்த காட்டு யானையின் உடல் அப்பகுதியிலே கிடந்தது.
அந்த வழியாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் துா்நாற்றம் வீசும் இடம் நோக்கி சென்று பாா்த்தபோது, அங்கு காட்டு யானையின் உடல் எலும்பு கூடாகக் கிடந்தது.
இதுகுறித்து அவா்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி தலைமையில் வனத்துறையினா் சென்று விசாரணை நடத்தினா்.
பின்னா் வனத்துறை கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எலும்பு கூடாக கிடந்த ஆண் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
