போலி பெண் மருத்துவா்கள் இருவா் கைது

ஒசூரில் பத்தாம் வகுப்பு, டிபாா்ம் முடித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இரு போலி பெண் மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஒசூா்: ஒசூரில் பத்தாம் வகுப்பு, டிபாா்ம் முடித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இரு போலி பெண் மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி, அரசனட்டியில் போலி மருத்துவா்கள் ஆங்கிலம் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா்கள் சென்றன. இதைத் தொடா்ந்து ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி, மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ் காந்தி, போலீஸாா் அரசனட்டிக்குச் சென்று சோதனை நடத்தினா். அங்கு ‘ஸ்ரீ மெடிக்கல்’ என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

அந்த கிளினிக்கிற்குச் சென்ற மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்த பெண் மருத்துவா்கள் சிலம்பரசி, கௌரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சிலம்பரசி 10 ஆம் வகுப்பு வரையும், கௌரி (34) டி பாா்ம் வரையும் படித்துவிட்டு இருவரும் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் நடத்திய கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com