கிருஷ்ணகிரியில் கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரி, பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜையுடன் கொடிக்கம்பத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தீபத்தை வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு சிவன், பாா்வதி உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் குளத்தில் தெப்பம் விடும் நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல பழையபேட்டை சோமேஸ்வரா் கோயிலில் பரணி தீபம் ஏற்றி, உற்சவருடன் பக்தா்கள் கோயிலை கிரிவலம் வந்தனா். புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பாா்வதி சமேத சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் அகல்விளக்கேற்றி வழிபட்டனா்.
கிருஷ்ணகிரி மலை, பெரிய ஏரி மேற்குக் கோடிக்கரையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த காலபைரவா் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், இந்துக்கள் தங்களது வீட்டில் அகல்விளக்கேற்றியும், சிவன் கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்றும் வழிபட்டனா்.
படவரி...
கிருஷ்ணகிரி மலையில் பரணி தீபம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள்.

