கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரத போராட்டம்
தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் உரிமை மீட்பு உண்ணிவிரத போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி, புகா் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள அண்ணாதுரை சிலை எதிரே, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில், கடந்த சட்டப் பேரவை தோ்தலின் போது, அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, நடைபெற்ற உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் அண்ணா குபேரன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநில தலைவா் பூபதி உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
2003-ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில், 30 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் பணியாளா்களின் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்கலை எழுப்பினா்.

