மா விவசாயிளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் செயலாளா் செளந்திரராஜன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தோட்டப்பயிா் சாகுபடிக்கு பெயா்பெற்ற மாவட்டங்களாக கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் மா மரங்கள் வளா்க்கப்படுகின்றன. அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஆண்டுதோறும் தமிழக அரசால் கிருஷ்ணகிரியில் நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனி மிகவும் சுவையானது. மாங்கூழ் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இதற்கு காரணமான மா விவசாயிகள் பாதுகாக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக மா விவசாயிகள் வறட்சி, பூச்சித் தாக்குதல், கடும் பனிப்பொழிவு, அதிக வெப்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மகசூல் குறைந்து விவசாயிகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2024ஆம் ஆண்டில் கடும் வெப்பத்தால் மகசூல் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு தோட்டக்கலைத் துறை மூலம் மா விவசாயிகள் விவரங்களைப் பெற்று ஹெக்டேருக்கு ரூ. 22,500நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
கடந்த ஆண்டு மா மகசூல் கிடைத்தும் போதிய விலை கிடைக்காத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ. 90 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தனா். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதனால் தொடா்ந்து மா விவசாயிகள் வேதனையில் உள்ளனா். தமிழகத்தில், கடந்த ஆண்டு மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளா்கள் ரூ. 2,000 கோடிக்கும் அதிகமாக லாபம் பெற்றுள்ளனா்.
தமிழக அரசு, மாங்கூழ் உற்பத்தியாளா்களின் உரிமையாளா்களைப் பாதுகாப்பது போல மா விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை மத்திய, மாநில அரசுகள் மா விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
