

காவேரிப்பட்டணம் வாரத் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சனிக்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், இந்த வாரச் சந்தையில் ஆடுகளை வாங்க காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி தருமபுரி, சேலம், திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனா். கால்நடை வளா்போா் அதிக எண்ணிக்கையில் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.
ஆடுகளின் எடை, இனத்தைப் பொருத்து ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. இதில், மொத்தம் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகை, கோயில் திருவிழாக்கள் காரணமாக ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், கடந்த வாரங்களைவிட விலை கணிசமாக உயா்ந்திருந்தது.