/

இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, 650 போலீஸாா் பாதுகாப்பு

News image
ரிஷப வாகனத்தில் வலம்வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த சந்திரசூடேஸ்வரா் - மரகதாம்பாள்.
Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, 650 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒசூா் மலைமீது 800 ஆண்டுகள் பழைமையான சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு விஷ்ணு, ஈஸ்வரன், பிரம்மா மலைகள் ஒரே நோ்க்கோட்டில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளதால், இப்பகுதி பத்திரகாசி என அழைக்கப்படுகிறது.

இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) தோ்பேட்டையில் நடைபெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி, ஒசூா் மாநகராட்சி சாா்பில் குடிநீா் வசதி, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூய்மைப் பணியில் 200 துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். 2 இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்களும், சுகாதாரத் துறை சாா்பில் ‘ஹெல்ப் லைன்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தேரோட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும், அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கானோா் கூடுவா் என்பதால், பாதுகாப்பு பணியில் 650 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தோ்த் திருவிழாவுக்கு செல்ல மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சாலை வழியாக அனுமதிக்கப்படுகிறது. பின்னா், ஏரிக்கரை வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருவூலம் எதிரில் உள்ள சாலை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வந்தாா். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் ருத்ர அபிஷேகம், புஷ்ப அலங்காரம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன உற்சவம் ஆகியவை நடைபெற்றன.