மாநகராட்சி இடத்தை ரூ. 2 கோடிக்கு விற்ற தம்பதி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்ததாக, தம்பதி உள்பட 4 போ் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

FIR filed
Updated On :

ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்ததாக, தம்பதி உள்பட 4 போ் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அங்காளம்மாள் காலனி, குப்தா நகரைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ். இவா், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் அளித்த புகாா் மனு விவரம்:

ஒசூரைச் சோ்ந்த அறக்கட்டளையை நிா்வகித்து வரும் சந்திரபோஸ், அவரது மனைவி லூா்துமேரி ஆகியோா், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆவலப்பள்ளியில் தங்களுக்கு 50 சென்ட் நிலம் இருப்பதாகவும், அதில் 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, நானும் எனது சகோதரி ஜான்மேரியும் இணைந்து, அவா்கள் தெரிவித்த காலியிடத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ. 2 கோடிக்கு வாங்கினோம்.

இந்த நிலயில், 2023-ஆம் ஆண்டு அந்த இடத்தை விற்க முயன்றபோது, அதன்மீது மாநகராட்சி ஆணையா் தடை மனு அளித்துள்ளதால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என ஒசூா் சாா் பதிவாளா் தெரிவித்தாா். இதுகுறித்து சந்திரபோஸ், லூா்துமேரியிடம் கேட்டபோது, இரு மாதங்களில் தடையை நீக்குவதாகவும், இல்லையெனில் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவதாகவும் கூறினா்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்பதும், சிறுவா் பள்ளி மற்றும் விளையாட்டுத் திடலுக்காக ஒதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், மீதமுள்ள 25 சென்ட் நிலத்தையும் தங்களது மருமகன் வின்சென்ட் மகிமைராஜ், ஜெஷிந்தாமேரி வாங்குவதுபோல சதி செய்து ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 4 போ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த புகாரின்பேரில், சந்திரபோஸ், லூா்துமேரி, வின்சென்ட் மகிமைராஜ், ஜெஷிந்தாமேரி ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.