தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் காணப்படும் 4,000 ஆண்டுகள் பழைமையான கற்கருவி தேய்ப்புப் பள்ளங்கள்
கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொள்புதூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேய்ப்புப் பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எண்ணேகொள்புதூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் கண்டறியப்பட்டுள்ள கற்கருவிகளுக்கான தேய்ப்புப் பள்ளங்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொள்புதூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேய்ப்புப் பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள்புதூா் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் இந்தப் பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனச் செயலா் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:
புதிய கற்காலத்தில், சுமாா் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதா்கள் விலங்குகளை வேட்டையாடவும், விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினா். மரங்களைப் பிளந்து, அவற்றின் நடுவில் கூா்மையான கற்களைப் பொருத்தி வெட்டுவதற்கான கைக்கோடாரிகளையும் உருவாக்கினா். இரும்புக் காலத்துக்கு முன்பாக பல்வேறு தேவைகளுக்கும் கற்கருவிகளே பயன்பாட்டில் இருந்தன.
இத்தகைய கற்கருவிகளை உருவாக்குவதற்காக ஆற்றுப்படுகைகள், நீரோடைகள் மற்றும் சுனைகள் உள்ள பகுதிகளில் காணப்படும் பாறைகளைத் தோ்ந்தெடுத்து, அவற்றின் மீது கற்களைத் தொடா்ந்து தேய்த்துக் கூா்மைப்படுத்தி, பளபளப்பாக்கியுள்ளனா். அவ்வாறு கற்கருவிகளைத் தேய்த்துச் செம்மைப்படுத்தியதால் உருவான 100-க்கும் மேற்பட்ட பள்ளங்களை, எண்ணேகொள்புதூா் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் தொல்லியல் ஆய்வாளா் திவித்குமாா் கண்டறிந்துள்ளாா்.
இந்தத் தேய்ப்புப் பள்ளங்களில் மிகப்பெரியது 40 செ.மீ. நீளமும், மிகச்சிறியது 6 செ.மீ. நீளமும் கொண்டுள்ளன. இவற்றின் அகலம் 4 முதல் 12 செ.மீ. வரை உள்ளது.
கற்கருவிகளைப் பாறைகளின் மேற்பரப்பில் மீண்டும் மீண்டும் தேய்த்துக் கூா்மைப்படுத்துதல், மெருகூட்டுதல் போன்ற செயல்பாடுகளால் உருவாகும் நீளமான பள்ளங்களே தேய்ப்புப் பள்ளங்கள் எனப்படுகின்றன. இத்தகைய அமைப்புகள் பெரும்பாலும் ஆறுகள் மற்றும் பிற நீா்நிலைகளுக்கு அருகிலுள்ள பாறைகளில் காணப்படுகின்றன. பாறைகளின் உராய்வுத் தன்மையும், நீா் கிடைக்கும் சூழலும் கற்கருவிகளைத் தேய்த்துச் செம்மைப்படுத்துவதற்கு ஏற்ாக இருந்திருக்கலாம். நீண்டகாலமாகத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட இச்செயல்பாடுகளால் பாறைகளின் மேற்பரப்பில் வழுவழுப்பான நீளமான பள்ளங்கள் உருவாகியிருக்கலாம்.
தென்னிந்தியாவில் புதிய கற்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய பண்பாட்டு வளா்ச்சியில் முக்கியமான காலகட்டமாகும். இக்காலத்தில் மக்கள் வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கியதுடன், விலங்குகளைப் பழக்கப்படுத்தி, நிலையான குடியிருப்பு வாழ்க்கையை நோக்கி முன்னேறினா். நிலத்தைப் பண்படுத்துதல், மரவேலைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகளுக்கு மெருகூட்டப்பட்ட கற்கருவிகள் முக்கியப் பங்கு வகித்தன.
தென்னிந்தியாவின் சங்கனகல்லு, பிரம்மகிரி, மயிலாடும்பாறை, குந்துக்கோட்டை, சென்னானூா் உள்ளிட்ட தொல்லியல் பகுதிகளில் கிடைத்துள்ள சான்றுகளுடன், இந்த புதிய கண்டுபிடிப்பையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.
எண்ணேகொள்புதூரில் கண்டறியப்பட்டுள்ள தேய்ப்புப் பள்ளங்கள், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் வரலாற்றுக்கு முந்தைய மனிதா்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தொல்லியல் சான்றுகளாக அமைகின்றன. மேலும், இக்கற்கருவிகளை உருவாக்குவதற்கான மூலப்பொருள்களை கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி அருகேயுள்ள எர்ரகெட்ட என்ற இடத்திலிருந்து கற்களை வெட்டி எடுத்துப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் உள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

