லாரி அடிச் சட்டங்கள் விற்பனையில் பெரும் சரிவு

தொழில்சாலைகளில் நிலவும் உற்பத்தி பாதிப்பால், போதிய அளவு சரக்குகள் கிடைக்காததால்
Updated on
2 min read

தொழில்சாலைகளில் நிலவும் உற்பத்தி பாதிப்பால், போதிய அளவு சரக்குகள் கிடைக்காததால், புதிய லாரி அடிச் சட்டங்கள் (சேஸ்கள்) விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் லாரி போக்குவரத்துத் தொழிலில் சிறந்து விளங்கும் நாமக்கல்லிலிருந்து சுமார் 55 ஆயிரம் லாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. லாரி போக்குவரத்துத் தொழில் இந்த மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவதாலேயே அசோக் லேலண்ட் நிறுவனம் லாரி அடிச் சட்டங்களுக்கான விற்பனைப் பிரிவை கும்மிடிப்பூண்டிக்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் நிறுவியுள்ளது.

இந்த நிறுவனத்தில் வாங்கப்படும் லாரி அடிச் சட்டங்கள் நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தாற்காலிகமாக பதிவு செய்த பிறகு, அவற்றின் மீது கூண்டு கட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் தாங்கள் சார்ந்த மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தரப் பதிவை மேற்கொள்கின்றனர்.

நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் தாற்காலிக பதிவு அடிப்படையில் லாரி அடிச் சட்டங்கள் வாங்குவது கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் வெகுவாகக் குறைந்துள்ளது.

2010-2011-ஆம் ஆண்டில் 9198 லாரி அடிச் சட்டங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நிகழாண்டு நவம்பர் இறுதி வரை 5625 அடிச் சட்டங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. தவிர, இதே ஏப்ரல் முதல் நவம்பர் வரை கடந்தாண்டு 6190 லாரி அடிச் சட்டங்கள் பதிவு செய்யப்பட்டன.

நிகழ் நிதியாண்டு நிறைவுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால், இன்னும் 1000 லாரி அடிச் சட்டங்கள் மட்டுமே பதிவாகலாம். கடந்தாண்டைவிட நிகழாண்டில் சுமார் 2000 லாரி அடிச் சட்டங்கள் வரை பதிவு குறையக்கூடும். அதனால், இந்த அலுவலகத்துக்கு இதுவரை ரூ.28 லட்சம் வருவாய் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களே 85 சதம் புதிய லாரி அடிச் சட்டங்கள் வாங்குகின்றனர். அவர்களும் தற்போது இவற்றை வாங்குவதைக் குறைத்துள்ளதால், அசோக் லேலண்ட் நாமக்கல் கிளையில் இதன் விற்பனை நிகழாண்டு 30 சதம் குறைந்துள்ளது என்கிறார் அந்த நிறுவன நாமக்கல் விற்பனைப் பிரிவு மேலாளர் இளங்கோ.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியது:

திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நாமக்கல்லிலிருந்து அதிகளவில் லாரிகள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பெல் நிறுவனத்துக்கு கிடைத்த சில கொள்முதல் ஒப்பந்தங்கள் சீனா உள்ளிட்ட போட்டி நாடுகளுக்கு கைமாறியதால், பெல் நிறுவனத்திலிருந்து லாரிகளுக்கு கிடைத்துவந்த சரக்குகளும் குறைந்துள்ளன. தவிர, பரவலாக முக்கிய திட்டப் பணிகளும் குறைந்திருப்பதும், மின் வெட்டு உள்ளிட்டவற்றால் தொழில்சாலைகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்பும் சரக்குகள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது, அதனால் லாரி உரிமையாளர்களிடையே ஏற்படும் போட்டியால் குறையும் வாடகையும் லாரி அடிச் சட்டங்கள் விற்பனை குறைவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்றார் அவர்.

புதிய லாரி அடிச் சட்டங்கள் விலை கடந்தாண்டைவிட 3 சதம் உயர்ந்திருப்பதும், வரி விகிதங்கள் மற்றும் எரிபொருள்களுக்கான செலவுகள் உயர்வு, ஓட்டுநர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளும் புதிய அடிச் சட்டங்கள் விற்பனை குறையக் காரணம் என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.

மேலும், தொழில்சாலைகள், விவசாயப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்புகள் லாரிகளுக்கு கிடைத்து வந்த சரக்குகளில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் புதிதாக லாரிகள் வாங்குவது குறைந்துள்ளது என்கிறார் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி.

லாரிகளுக்கான சரக்கு தட்டுப்பாடு குறித்து சரக்குப் பதிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராஜவேல் கூறியது:

சேலம் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஜவ்வரிசி, ஸ்டார்ச், கம்பி, கல்மாவு, மஞ்சள், ஜவுளிப் பொருள்கள் என நாள்தோறும் 500 லாரிகளுக்கு சரக்குகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது சரக்குகள் பதிவு பாதியாகக் குறைந்துள்ளது. அந்த வகையில், சரக்கு உற்பத்திக் குறைவுக்கு கடுமையான மின் வெட்டு பிரச்னையே முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com