வறுமையால் உயர் கல்வி பெற முடியாமல் தவிக்கும் மாணவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயதுத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட இரு மாணவிகள், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயதுத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட இரு மாணவிகள், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், வறுமை காரணமாக அவர்கள் மேல் படிப்பைத் தொடர முடியாமல் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்தவர் வசந்தகுமார். இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி லதா, மகள்கள் பிரியங்கா, சுகந்தி. லதா வெற்றிலை விவசாய வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். பிரியங்கா, சுகந்தி ஆகியோர் திருச்செங்கோடு அரசு விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த பிரியங்காவை குடும்ப வறுமையால் பரமத்திவேலூரைச் சேர்ந்த காகித ஆலைத் தொழிலாளிக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது. கடந்த மார்ச் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணம், லீஃப் தொண்டு நிறுவனம், வருவாய்த் துறை அலுவலர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, பிரியங்கா மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய பிரியங்கா 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்து பிஎஸ்ஸி., கணிதம் படிக்க விரும்பிய அவர், வறுமை காரணமாக தனது எண்ணத்தைக் கைவிட்டு, தற்போது தனது தாயுடன் வெற்றிலை கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்காவின் தாய் லதா கூறியது:

சிறு வயது முதலே நன்றாகப் படிக்கும் பிரியங்கா பத்தாம் வகுப்பில் 454 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, பிளஸ் 2 படித்து கொண்டிருந்த பிரியங்காவை குடும்ப வறுமையாலும், இரு பெண் பிள்ளைகளை வைத்திருப்பதாலும் வேறு வழியின்றி திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்குப் பிறகு, தொடர்ந்து படிக்க வைப்பதாக மணமகன் வீட்டார் அளித்த உறுதியால் பிரியங்காவும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் அவருக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்தோம். ஆனால், அதிகாரிகள் முயற்சியால் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு, பிரியாங்கா தனது பிளஸ் 2 படிப்பை தொடர்ந்தார். நடந்து முடிந்த தேர்வில் அவர்,  976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வுக் காலத்தில் திருமணம் சார்ந்த இடையூறுகள் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அவர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கக்கூடும்.

பிரியங்கா உயர் கல்வி பெறுவதற்கு என்னிடம் போதிய பொருளாதார வசதி இல்லை. அதனால், கொடையாளர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன் என்றார்.

மற்றோரு மாணவி: இதேபோல, இளம் வயதுத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட மற்றொரு மாணவி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 991 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பள்ளியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.

நாமக்கல் திண்டலமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமசாமி, கவிதா தம்பதியின் மூத்த மகளான தாமரைச்செல்வி எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக தாமரைச்செல்வியை அதே ஊரைச் சேர்ந்த 27 வயது விவசாயி ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் வருவாய்த் துறை அதிகாரிகளின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து, பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் இந்த மாணவிக்கு குடும்ப வறுமை முட்டுக்கட்டையாக உள்ளது.

இதுகுறித்து அந்த மாணவியின் தாய் கவிதா கூறியது:

மூன்று பெண் பிள்ளைகள் உள்ள எங்கள் குடும்பத்தில் எனது கணவர் ராமசாமி லாரி ஓட்டச் சென்றால்தான் வாழ்க்கை நடத்த முடியும். இதனாலேயே, பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த மூத்த மகள் தாமரைச்செல்வியை பள்ளியிலிருந்து நிறுத்தி திருமணம் செய்திட முடிவு செய்தோம். தற்போது பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள தாமரைச்செல்வி தொடர்ந்து பொறியியல் படிப்பு படிக்க விரும்புகிறார். ஆனால், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் அளவுக்கு வசதியில்லை. யாரேனும் உதவினால் தாமரைச்செல்வியை தொடர்ந்து படிக்க வைப்போம் என்றார் கவிதா.

இந்த இரு மாணவிகளுக்கு உதவி செய்ய விரும்புவோர் பிரியங்கா குடும்பத்தை 99947 73354 என்ற அலைபேசி எண்ணிலும், தாமரைச்செல்வி குடும்பத்தை 98945 99431 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

சமூக அவலம்:
இளம் வயதுத் திருமணம் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் அதிகளவில் நடக்கும் சமூக அவலமாகும். வறுமை மட்டுமன்றி வரதட்சிணை, பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றால் பெண்களை சுமையாக கருதுவதும் இளம் வயதுத் திருமணம் அதிகரிக்க காரணமாகும்.

இத்தகைய இளம் வயதுத் திருமணங்களை தடுக்க பிரியங்கா, தாமரைச்செல்வி ஆகிய மாணவிகளின் நிலைமையை வெளிப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும் என்றார் லீஃப் தொண்டு நிறுவன இயக்குநர் சத்தியநேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com