போதிய மழை இல்லாததால் பொங்கலுக்கு விற்கப்படும் செங்கரும்பு மிகக்குறைவான அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரும்பு விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், காரவள்ளி, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கரும்புகள் நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லப்படுகின்றன.
தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் அடுத்த பொங்கலுக்கான கரும்பு நடவு தொடங்கிவிடுகிறது. மாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலங்களில் கரும்பின் கரணை நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 10 மாதங்களில் முழுமையாக வளர்ந்து கரும்புகள் அறுவடைக்குத் தயாராகின்றன.
இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லை. நிகழாண்டும் இப்பகுதிகளில் போதுமான மழை இல்லை. தொடர்ந்து மழை குறைந்து வருவதால், ஆண்டுதோறும் செங்கரும்பு விவசாயம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
நிகழாண்டு கரும்பு விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
காரவள்ளி விவசாயிகள் கூறுகையில், மழையை நம்ப முடியாததால் ஏராளமானோர் செங்கரும்பு விவசாயத்தை குறைத்து வருகின்றனர். நிகழாண்டில் 1,000 ஏக்கருக்கும் குறைவாகவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாமை, உரம், மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் அதிகப்படியான செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். தற்போது ஒரு வண்டி கரும்பு (300 கரும்புகள்) ரூ.5,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தற்போது கரும்புகளை வயலில் பார்த்துதான் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.
வியாபாரிகள் இந்த விலை கொடுத்து வாங்கி, வாகனச் செலவு உள்ளிட்ட மற்ற அனைத்துச் செலவுகளையும் சேர்த்து ரூ.8,000-க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். இதனால் 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டுக் கரும்பு ரூ.300 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளதால் கரும்பின் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.