மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

"துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பங்களிப்பு வேண்டும்'

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் தமிழ்வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன். 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:35 am

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் தமிழ்வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன். 
நாமக்கல் நரசிம்மசாமி கோயில் மற்றும் அரங்கநாதர் கோயில்களில் கற்சிற்பங்கள், விதானங்கள் மற்றும் குடவறைகளை அவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் மலைக்கோட்டைக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர்,  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள 212 புராதன சின்னங்களையும், உலக அளவில் தெரியப்படுத்தும் விதமாக மாநில அரசு பாதுகாத்து வருகிறது. மேலும், 5 புராதன சின்னங்களை நிகழாண்டு முதல் தனியார் பங்களிப்போடு புனரமைத்து பாதுகாக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள அரிய கலை படைப்புகளை மற்ற தொல்லியல் சுற்றுலாவுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்படும். இந்த ஆண்டு நாமக்கல்லில் அமைக்கப்படும். இன்னும் ஓராண்டில் தேனி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த அருங்காட்சியகங்கள் அரசியல், அறிவியல், கலை, பண்பாடு, விலங்கினங்கள், பறவைகள் குறித்த வரலாற்று ஆய்வகமாக செயல்படும்.
 கீழடி, பற்றைபெரும்புதூர் ஆகிய இடங்களில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம் பகுதியில் ஆராய்ச்சியின்போது 3.75 லட்சம் ஆண்டுகள் பழமையான கல் ஆயுதங்கள் கிடைத்து உள்ளன. இதனால் உலகின் முதல் ஆதி மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில்தான் காணப்பட்டான் என்ற வரலாற்று கருத்துருமாறி,  அதிரம்பாக்கம் ஆராய்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தமிழக தொல்லியல் ஆராய்ச்சிகள் மீது அதிக கவனம் திரும்பி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சிற்றரசன் அதியமானின் நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன. குடவறை கோயில்களில் மகாபலிபுரத்துக்கு அடுத்தபடியாக நாமக்கலில் அதிக சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கொல்லிமலையை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் குறித்து இலக்கிய சான்றுகள் காணப்படுகின்றன. அவர் குறித்த தொல்லியல் சான்றுகளைக் கண்டறியும் வகையில் தொல்லியல் துறை விரைவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது என்றார்.
அவரிடம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தே தனது கருத்து என்றும், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.