தெலுங்கு பேசும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்குப் பாதுகாப்பு,  உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Updated on
1 min read

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்குப் பாதுகாப்பு,  உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தெலுங்கு பேசும் சமுதாயத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தெலுங்கு சம்மேளன பொதுச் செயலாளர் வேங்கட்ட விஜயன்  தலைமை வகித்தார். விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் நாகராஜன் வரவேற்றார். 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞர் கே.எஸ். ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களைப் பாதுகாக்கவும், உரிமைகளைப் பெற்றிடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, தமிழகத்தின் உரிமைக்காகப் போராடிய தெலுங்கு பேசும் தலைவர்களின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு சார்பில், புத்தகங்களை வெளியிட வேண்டும்.  பள்ளிப்பாடப் புத்தகங்களிலும் அவற்றைப் பாடமாக்க வேண்டும்.
தமிழகத்தில் அண்மை காலமாக தெலுங்கு பேசும் மக்களை தரம் தாழ்த்தி பேசுவது அதிகரித்து வருகிறது. அப்படி செய்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தெலுங்கு பேசும் மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தேர்தல்களில் போதிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 
 இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவனத் தலைவர் வீரசிதம்பரம், நாயுடு நாயக்கர் மகாஜன பேரவை நிறுவனத் தலைவர் ஜெயக்குமார், தொழுவ நாயக்கர் சங்க மாநிலச் செயலாளர் தங்கபாண்டியன், தெலுங்கு கலாசார ஆய்வாளர் பிரணவகுமார், ஒண்டிவீரன் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் செல்வராஜ், தெலுங்கு சம்மேளன பொருளாளர் நரசிம்மன், உழைப்பாளர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமகோபால தண்டாள்வர்,  மாமன்னர் திருமலைநாயக்கர் பண்பாட்டுக் கழக ஈரோடு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்டத் தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com