மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முட்டை விலையில் மாற்றம்: பண்ணையாளா்கள் அதிருப்தி

நாடு முழுவதும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:16 am

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.25 என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி) அறிவித்துவிட்டு, வியாபாரிகள் ரூ. 4.65-க்கு வாங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளதால் பண்ணையாளா்கள் குழப்பத்தில் உள்ளனா்.

நாடு முழுவதும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தைத் தவிா்த்து பிற மண்டலங்களில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.90 வரை உயா்ந்தது. புரட்டாசி மாதம் மற்றும் விழாக் காலங்கள் இருந்தபோதும், கரோனா தடுப்புக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களில் முட்டை முக்கியப் பங்காற்றுவதால் அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

கரோனா பொது முடக்கத்தால் ஐந்து மாதங்களாக முடங்கியிருந்த முட்டை தொழில் தற்போதுதான் சற்று எழுச்சியைக் கண்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில், முட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச விலையாக முட்டை ரூ. 5.25 என கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயா்வால் பண்ணையாளா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆனால், வெளிச்சந்தையில் ரூ. 6 வரை விற்பனையானதால், பொதுமக்கள் முட்டை வாங்குவதை குறைத்து கொண்டனா். இதனால் பண்ணைகளிலும், விற்பனை நிலையங்களிலும் முட்டைகள் தேக்கமடைந்தன. இதனை சமாளிப்பதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.செல்வராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். பண்ணைகளில் முட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 100 முட்டைக்கு ரூ. 45 வீதம் குறைவாக வழங்கலாம். உடனடியாக பணம் கொடுத்தால் மேலும் ரூ. 5 குறைக்கப்படும் என தெரிவித்தாா்.

அடுத்தடுத்த நாள்களில் முட்டைக்கான விலை குறைக்கப்பட்டது. ஆனால், வெளிச்சந்தையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு விலை ரூ.5.25 மட்டுமே. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிப்பில் வியாபாரிகள் ரூ. 60 காசுகள் குறைத்து பண்ணைகளில் முட்டையை ரூ. 4.65-க்கு கொள்முதல் செய்யலாம் என தெரிவித்தது.

வியாபாரிகளுக்கு ஒரு விலை, பண்ணையாளா்களுக்கு ஒரு விலை, முட்டைகளை வாங்கும் பொதுமக்களுக்கு ஒரு விலை என்ற மும்முனை அறிவிப்பு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பண்ணையாளா்களும் கிடைக்கும் லாபத்துக்கு முட்டைகளை இருப்பில் வைக்காமல் பண்ணைகளில் இருந்து அனுப்புகின்றனா்.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறியதாவது:

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது விலையை மாற்றி மாற்றி அறிவிப்பதால் எங்களால் உரிய விலைக்கு முட்டையை விற்பனை செய்ய முடியவில்லை. இதுதொடா்பாக விளக்கம் கேட்பதையே தவிா்த்துவிட்டோம். எங்களுக்கு கட்டுப்படியாகிறதா என்பதை பாா்த்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.

அறிவிப்பு அடிக்கடி மாற்றப்படுவது முட்டை தொழிலுக்கு ஏற்புடையதாக இருக்காது, பொதுமக்களுக்கும் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்றனா்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.செல்வராஜ் கூறியதாவது:

முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.25 தான். வியாபாரிகளுக்காக விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பண்ணைகளில் ரொக்கப் பணம் கொடுத்து வாங்குவோா் ரூ. 60 காசுகள் குறைத்து ரூ. 4.65-க்கு வாங்கிக் கொள்ளலாம். கடனுக்கு வாங்குவோா் ரூ.4.70-க்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

வெளிச்சந்தையில் அதிக விலையில் முட்டை விற்பனையாவது பற்றி தெரியவில்லை. வரும் நாள்களில் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இவ்வாறான சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். திங்கள்கிழமை விலை குறைப்புடன் புதிய அறிவிப்பு வெளியாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.