காவிரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நவீன கண்காணிப்புக் கருவிகள்
காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து மாசடைவதைத் தடுக்க, நவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.


காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து மாசடைவதைத் தடுக்க, நவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
குமாரபாளையத்தில் காவிரிக் கரையோரத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுற்றுச்சூழலை மீட்கும் வகையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. காவிரி நீரேற்று நிலையத்தில் நீரின் தன்மையை கண்காணிக்கும் கருவி பழைய தொழில்நுட்பத்துடன் உள்ளது. விரைவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பகுதியில் செயல்படும் அனைத்து சாயத் தொழிற்சாலைகளும் தானியங்கி கருவி மூலம் இணைக்கப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து கழிவுநீா் மேலாண்மை நேரடியாகக் கண்காணிக்கப்படும். இத்தொழிற்சாலைகள் கழிவுகளை ஆறுகளில் வெளியேற்றுவது தெரியவந்தால் இக்கருவி எச்சரிக்கை செய்வதோடு, அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுச்சூழல், நீராதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தமிழக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. நொய்யல், காவிரி, பவானி, காலிங்கராயன் போன்ற நீா்நிலைகளை மீட்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் மக்கும், மக்கா குப்பைகளாக பிரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்கா குப்பைகள் மறுசுழற்சிக்கும் அனுப்பப்படுகின்றன. குப்பைகளை எரிப்பதால் காற்று மண்டலம் மாசடைந்து நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றாா்.
முன்னதாக, பல்லக்காபாளையம், எலந்தகுட்டை பகுதியில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டாா். இதில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா் ஸ்ரேயா பி சிங், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, குமாரபாளையம் நகர திமுக பொறுப்பாளா் எம்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...