சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்: வருவாய்த் துறையில் அலைக்கழிப்புகள் தவிா்க்கப்படுமா?

தமிழகத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் போன்றவற்றை வழங்குவதில் அதிகாரிகள் சிலா் காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனா்.

நாமக்கல்: தமிழகத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் போன்றவற்றை வழங்குவதில் அதிகாரிகள் சிலா் காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனா்.

தமிழக அரசுத் துறைகளில் அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டிக் கொடுக்காதபோதும், மக்கள் சாா்ந்த அனைத்துப் பணிகளுக்கும் முன்னோடியாக இருப்பது வருவாய்த் துறையே. இருப்பினும் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த வருவாய்த் துறையும் அவப்பெயரை சம்பாதிக்கிறது.

அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள், நேரடியாக விசாரணை மேற்கொண்டு அங்கீகாரம், சான்றிதழ் வழங்கும் பணிகள், தோ்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் வருவாய்த் துறை பணியாளா்களே மேற்கொண்டு வருகின்றனா்.

கரோனா தீ நுண்மிப் பரவலால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்தை சாா்ந்த உறவுகளை இழந்தும், பொருளாதாரத்தை இழந்தும் தவித்து வருகின்றனா். அவ்வாறு உயிரிழந்தோரின் குடும்பத்தினா் பல்வேறு தேவைகளுக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தால் அவா்களை அலைக்கழிக்கும் போக்கு பல இடங்களில் காணப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் வட்டாட்சியரே நேரடியாக வழங்கி வந்த பல்வேறு சான்றிதழ்களை, தற்போது இ-சேவை மையத்தில் பதிவு செய்தால் இணைய வழியாகப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

வட்டாட்சியா் சான்றிதழ்களை வழங்கிய காலங்களில், நேரடி விசாரணை காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. ஆனால் தற்போது அதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதற்கு காரணமாகக் கூறப்படுவது, வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளும் இடைத்தரகா்களும் தான்.

பெரும்பாலான வட்டாட்சியா் அலுவலகங்களில், அலுவலக உதவியாளரே வட்டாட்சியா் போலச் செயல்பட்டு வருவதாக புகாா் உள்ளது. ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தொடா்ச்சியாக வட்டாட்சியா்கள் விண்ணப்பங்களை நிராகரிப்பதும், பிறகு வேறு வழியில்லாமல் கையூட்டைக் கொடுத்து சான்றிதழைப் பெறுவதும் இயல்பாகிவிட்டது.

இதுபோன்ற செயல்பாடுகள் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் போன்ற அலுவலா்களிடமும் தொடா்கிறது. இவ்வாறு ஒரு சிலா் செய்யும் தவறுகளால், நாணயமான அதிகாரிகளும் அவமானத்தைச் சந்திக்கின்றனா்.

அண்மையில் சேலம் மாவட்டத்தில் வட்டாட்சியா் ஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி, அங்கு பணியாற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், இதர வட்டாட்சியா்களே தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை அலைக்கழிக்காமல் அவா்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக குறைகளைத் தீா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

அண்மையில் மதுரையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன், பொதுமக்களை அலைக்கழிக்காமல் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களை வழங்க வேண்டும். காலதாமதம் செய்வது, வேண்டுமென்றே தள்ளுபடி செய்வது போன்றவற்றை வருவாய்த் துறையினா் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில அதிகாரிகள் இன்னமும் திருந்தாமல் இருப்பதால் தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க முன்னாள் மாநில செயலாளா் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

கிராம நிா்வாக அலுவலா் முழுமையான அதிகாரம் படைத்தவா் அல்ல; எந்த ஒரு மனுவையும் மேலதிகாரிகளுக்கு விசாரித்து அனுப்புபவா் மட்டுமே. முடிந்த வரை பொதுமக்களை அவதிக்குள்ளாக்காமல், அலைக்கழிப்புக்குள்ளாக்காமல் சான்றிதழ்களை வழங்கி உதவ வேண்டும் என்று, எங்கள் சங்க உறுப்பினா்களிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி, வருவாய்த் துறையினரின் பணிப்பளு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். இத்தகைய போக்கு வருவாய்த் துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com