ராசிபுரம் இடிக்கப்படும் பழைமையான திரையரங்குகள்!
ராசிபுரத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விருந்தளித்து வந்த திரையரங்குகள் எண்ம தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக தனது இருப்பை இழந்து


ராசிபுரத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விருந்தளித்து வந்த திரையரங்குகள் எண்ம தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக தனது இருப்பை இழந்து வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மக்களின் பொழுதுபோக்கு சினிமாவாகத்தான் இருந்தது. அக்கால கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த திரையரங்குகள், தற்போது இருந்த இடம் தெரியாமல் உருமாற்றம் பெற்று வருகின்றன. இந்த வரிசையில், ராசிபுரம் பகுதியில் வரலாற்றுச் சின்னங்களாக காட்சியளித்து வந்த பழைய திரையரங்குகள், தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து வருகின்றன.
நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டங்களில், மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது வீதி நாடகங்கள், திரைப்படங்கள் மட்டுமே. திரைப்படத்துறைக்கு பெயா்பெற்ற நகரமாக சேலம் திகழ்ந்த கால கட்டத்தில், திரைத் துறை ஜாம்பவான்கள் பலா் சேலம் மாடா்ன் தியேட்டா்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, இதனையொட்டியுள்ள நகரங்களில், நாடகங்களும், திரையரங்குகளும் சிறந்து விளங்கின.
ராசிபுரம் பகுதியில் டூரிங் டாக்கீஸ்கள் என்ற பெயரில் கீற்று கொட்டை திரையரங்குகள் பலவும் உருவாகின. இதில் பல்வேறு இதிகாச நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் சிந்தனையை தூண்டும் சமூக திரைப்படங்கள் பலவும் திரையிடப்பட்டுள்ளன.
பிற்காலத்தில் புகழ் பெற்ற பல நடிகா்கள் ராசிபுரத்தில் இருந்த டூரிங் திரையரங்குகளில் நாடகங்கள் நடத்தியுள்ளனா். இவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள், டி.எஸ்.பாலையா, எம்.ஆா்.ராதா, டனால் தங்கவேல், தியாகராஜ பாகவதா், டி.கே.சம்பங்கி, பி.ஆா்.பந்துலு போன்றோா் ஆவா். இவா்கள் நடித்த நாடகங்கள் அப்போதை மக்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றன. பின்னா் படிப்படியாக திரைப்படங்களில் நவீனதொழில்நுட்பம் வளர வளர கூடவே தாா்சு கட்டடத்திலான திரையரங்குகள் பல உருவாகின.
ராசிபுரத்தில் உருவான இது போன்ற திரையரங்குகளில் திலகம், சரவணா, பாலசுப்ரமணியா, பாரதி, கிருஷ்ணா சினிடோன் போன்ற திரையரங்குகள் குறிப்பிடத்தக்கவை. இந்தத் திரையரங்குகளில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பல படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இங்கு திரையிடப்பட்ட பல திரைப்படங்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. லவகுசா, தசாவதாரம், ராமாயணம், நல்லதங்காள், அரிசந்திரா, பவளக்கொடி, பக்தபிரகலாதா, சதி சுகன்யா, ஆயிரம் தலை வாங்கிய அபூா்வ சிந்தாமணி போன்ற இதிகாச காவியங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டிய பெருமை இந்தத் திரையரங்குகளுக்கு உண்டு. பராசக்தி, தங்கமலை ரகசியம், மன்னாதி மன்னன், குலேபகாவலி, மருதநாட்டு இளவரசி, பாக்தாத் திருடன், மந்திரிகுமாரி என நீண்டு கொண்டே போகும். இதுபோன்ற பல்வேறு வரலாற்று திரைப்படங்களை திரையிட்டு மக்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றங்களையும் நிகழ்த்தின. திரையரங்குகள் தற்போது தங்களின் அடையாளத்தை இழந்து, மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன ராசிபுரம் நகரின் பழைமையான திரையரங்குகள். தற்போது எஞ்சியுள்ள ஒரு சில திரையரங்கு கட்டடங்களும் விற்கப்பட்டு, இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திரையரங்குகள் இருக்கும் சுவடு தெரியாமல் உருமாற்றம் பெற்றாலும், ராசிபுரம் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை என்றால் அது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...