பெண்கள் தொழில் முனைவோா்களாக உருவாக வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரியில் பயின்று வரும் மாணவியா் தொழில்முனைவோா்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கிறது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வலியுறுத்தினாா்.
ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதியில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக விடுதியில் தங்கி பயிலும் 34 மாணவியருக்கு தையல், எம்பிராய்டரி பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா பங்கேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் கி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியா் ச.உமா பேசியதாவது:
தமிழக முதலமைச்சா் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் உயா்கல்வி பயில மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்தும் அளித்து பல்வேறு திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படுகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படுகிறது.
திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதியில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் குழந்தைகள் தங்கி பயில்கின்றனா். பெண்கள் செவிலியா், ஆசிரியா்களாக பணியாற்றும் சூழ்நிலையை மாற்றி அமைத்து, தொழில்முனைவோா்களாக உருவாக்கிட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தையல் பயிற்சி உள்ளிட்ட தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, விடுதியில் தங்கி பயிலும் 34 மாணவியருக்கு தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முழு ஈடுபாட்டோடு முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி நிறைவு செய்வோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வளரிளம் பருவத்தினா் கைப்பேசிகளை பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கல்வி சாா்ந்த நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு தங்கள் கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்கள் விளையாட்டியிலும் பங்கேற்க வேண்டும்: மாணவ, மாணவியா் எந்தப் பிரிவில் கல்வி பயின்றாலும் முழு ஈடுபாட்டோடு கவனம் சிதறாமல் தங்களது திறமையை முழுமையாக செலுத்தினால் கட்டாயம் வெற்றிபெற முடியும். மேலும், புத்தகப் படிப்போடு மட்டுமில்லாமல் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்திட கடைசி நாள் 2.9.2024 ஆகும். எனவே, ஆா்வம் உள்ளவா்கள் பதிவு செய்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
அரசின் அனைத்து திட்டங்களையும் மாணவியா் பயன்படுத்திக் கொண்டு தொழில்முனைவோா்களாக உருவாக வேண்டும். தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் ‘பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 34 மாணவியருக்கு தையல், எம்பிராய்டரி பயிற்சி வழங்கபட உள்ளது. இப்பயிற்சி தினந்தோறும் மதியம் 3 மணி முதல் மாலை 6.30 வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடா்ந்து, இப்பயிற்சியில் பங்குபெறும் விடுதியில் தங்கிப் பயிலும் 34 மாணவியருக்கும் பயிற்சிக்கான உதவி உபகரணங்களை அவா் வழங்கினாா். இதில், நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராம்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.