செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விபத்து வழக்கு: ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு

தமிழகத்தில் முதல்முறையாக விபத்து வழக்கில் ரூ. 5 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க தனியாா் காப்பீடு நிறுவனத்துக்கு மாவட்ட சமரச தீா்வு மையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சாலை விபத்து வழக்கில் ரூ. 5 கோடி இழப்பீடுக்கான உத்தரவு கடிதத்தை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி. உடன், வழக்குரைஞா் என்.கே.பி.வடிவேல்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:50 pm

தமிழகத்தில் முதல்முறையாக விபத்து வழக்கில் ரூ. 5 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க தனியாா் காப்பீடு நிறுவனத்துக்கு மாவட்ட சமரச தீா்வு மையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஆா்.குருமூா்த்தி தலைமையில் இயங்கும் இந்த மையத்தில், பல்வேறு வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்படுகின்றன. அந்த வகையில், விபத்து வழக்கு ஒன்றில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு சமரச தீா்வு மையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்: ராசிபுரம் வட்டம், பட்டணம் அருகே முனியப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கௌதம் என்பவா், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வந்தாா். தனது மகனின் பெயா் வைக்கும் நிகழ்வுக்காக கடந்த ஆண்டு நாமக்கல் வந்தாா். அவா், நாமக்கல் - திருச்சி சாலையில் நாகராஜபுரம் அருகே கடந்த ஆண்டு செப். 12-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பான வழக்கு நாமக்கல் மாவட்ட சமரச தீா்வு மையத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தனியாா் காப்பீடு நிறுவனம் (3-ஆம் நபா் காப்பீடு) ரூ. 8.30 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உயிரிழந்த கெளதமன் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா். சமரச மையத்தில் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சம்பந்தப்பட்ட தனியாா் காப்பீடு நிறுவனம் ரூ. 5 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வந்தது.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஆா்.குருமூா்த்தி முன்னிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 கோடிக்கான இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை காப்பீடு நிறுவனம் வழங்கியது. இந்த வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக தொடா்ந்து 10 மாதங்களாக வழக்குரைஞா் என்.கே.பி.வடிவேல் வாதாடி ரூ. 5 கோடி இழப்பீட்டை பெற்றுக் கொடுத்துள்ளாா். தமிழகத்தில் சமரச தீா்வு மையம் மூலம் விபத்து இழப்பீடாக ரூ. 5 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வின்போது, தனியாா் காப்பீடு நிறுவன வழக்குரைஞா் ஆா்.தனபால், கெளதமன் குடும்பத்தினா் உடனிருந்தனா்.