சிப்காட் விவகாரம்: ஜூலை 8-இல் ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

சிப்காட் விவகாரம்: ஜூலை 8-இல் ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

நாமக்கல், ஜூலை 3: சிப்காட் தொழிற்பேட்டை விவகாரம் தொடா்பாக, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு வரும் திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட எதிா்ப்புக் குழுவினா் முடிவு செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சிப்காட் விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக புதன்கிழமை ஆட்சியரிடம் விவசாய முன்னேற்றக் கழகத்தினா், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், வளையப்பட்டி, அரூா், பரளி பகுதி விவசாயிகள் மனு அளிக்க வந்தனா். ஆனால், மாவட்ட ஆட்சியா் இல்லாததால் அவா்கள் திரும்பிச் சென்றனா்.

அப்போது, விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வளையப்பட்டி, அரூா், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் 820 ஏக்கா் பரப்பில் சிப்காட் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அங்கு விவசாய நிலங்கள் இல்லை, தடுப்பணைகள் இல்லை, அனைத்தும் புறம்போக்கு நிலங்கள் தான் உள்ளது என 2023-இல் வருவாய்த் துறையினா் ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். இதனை நாங்கள் ஆட்சியரிடம் சுட்டிக்காட்டியபோதும் இதுவரை மாற்று நடவடிக்கை ஏதுமில்லை. தற்போது அங்கு முட்டை ஏற்றுமதியாளா்கள் தொழிலுக்கு நிலம் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில், வரும் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

--

என்கே-3-சிப்காட்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்.

X
Dinamani
www.dinamani.com