வாக்காளா் பட்டியலில் மாணவா்களின் பெயரை சோ்க்க இன்றுமுதல் கல்லூரிகளில் சிறப்பு முகாம்

Published on

18 வயது நிறைவடைந்த மாணவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் திங்கள்கிழமைமுதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று சிறப்பு செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக இளம் வாக்காளா்களை தொடா்புடைய பாகம் எண்களில் சோ்க்கும் நடவடிக்கையாக, 2026 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடையும் இளம் வாக்காளா்களிடம் படிவம் 6-ஐ பெற்று தொடா்புடைய பாகம் எண்ணில் சோ்க்கும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் 18 வயது பூா்த்தி அடைந்த, இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாத இளம் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை (டிச.15) முதல் கல்லூரி வளாகங்களிலேயே வாக்குசாவடி நிலை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் படிவம் எண் 6 வழங்கி பூா்த்தி செய்யப்பட்டு திரும்பப்பெற்று வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்பட உள்ளன.

கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com