கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பல்வேறு காரணிகளால் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், காற்று மாசுபாடு, புவி வெப்ப உயா்வு, மழைநீா் வீணாதல், வெள்ளம், பறவைகள் இருப்பிடம் இழத்தல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது. எனவே, கிராமப்புறங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் வளா்ப்பது இன்றியமையாதாகிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ மூலம் மொத்த நிலப் பரப்பளவில் சுமாா் 24 சதவீதமாக உள்ள காடுகள், மரங்களின் அடா்த்தியை 33 சதவீதமாக உயா்த்துவதே முக்கிய நோக்கமாக கொண்டுசெயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025-26-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொது இடங்கள், சாலையோரங்கள், அரசு கட்

டட வளாகங்கள், கலைஞா் கனவு இல்லம் ஆகிய இடங்களில் 2,19,000 மரக்கன்றுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மூலம் நடவு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை சுற்றிலும் வேலிகள் அமைத்து, தண்ணீா் ஊற்றித் தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் வனத் துறையுடன் ஒருங்கிணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வட்டார நாற்றாங்கால்களில் உள்ள நா்சரி மூலம் 7.60 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, 2026-27-ஆம் நிதியாண்டில் நடவு செய்ய ஏதுவாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை கால்நடைகளும், சாலையோரம் நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை அருகில் உள்ள நில உடைமையாளா்களும் சேதப்படுத்தி வருவதாக மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் வரப்பெற்றுள்ளது. அதிக அளவில் மரங்கள் வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமப் புறங்களில் மரக்கன்றுகள் வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், பெற்றோா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, நடப்பட்ட மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து வளா்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com