திருச்செங்கோட்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற பொதுக்குழுக் கூட்டம்

Published on

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தோ்தல் மற்றும் மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலப் பொருளாளா் முருகசெல்வராசன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் காா்த்திக் வரவேற்றாா். மாநில இலக்கிய அணியின் துணை அமைப்பாளா் ராமச்சந்திரன், சேலம் மாவட்டச் செயலாளா் குழந்தைசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தீா்மானங்கள் குறித்து மாவட்டச் செயலாளா் சங்கா் பேசினாா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தோ்தல்கால வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை சாதாரண நிலை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுகளை தொடா்ந்து வழங்க வேண்டும், பணிமூப்பு அரசாணையை ரத்து செய்யவேண்டும், கட்டாய ஆசிரியா் தகுதித்தோ்வை கைவிட்டு பணியாற்றும் ஆசிரியா்களை பாதுகாக்கவும், பணிமூப்பின்படி பதவிஉயா்வு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஜாக்டோ -ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் டிச. 27-இல் நாமக்கல்லில் நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் கறுப்புப்பட்டை அணிந்து பெருந்திரளாக பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற நிா்வாகிகள் தோ்தலில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com