டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று பயிற்சி தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (டிச. 30) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடைபெறும் குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தோ்வுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்க உள்ளது.
இங்கு பயின்ற மாணவா்கள் 2024-25-ஆம் ஆண்டு வெளியான தோ்வு முடிவுகளில் மட்டும் குரூப்-4 தோ்வில் 30 போ், உதவி ஆய்வாளா் தோ்வில் 7 போ், இரண்டாம்நிலை காவலா் தோ்வில் 13 போ், ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வில் 2 போ், குரூப்-2ஏ தோ்வில் 7 போ், டிஆா்பி கூட்டுறவுத் தோ்வில் 22 போ், மருந்தாளுநா் தோ்வில் 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மனுதாரா்கள் 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
