முகம்மது பாசில்ஷா.
முகம்மது பாசில்ஷா.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: எஸ்.பி.யிடம் இளைஞா் புகாா்

வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நாமக்கல் தனியாா் நிறுவன உரிமையாளா் ரூ.18.92 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் திருச்சி இளைஞா் புகாா் அளித்தாா்.
Published on

வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நாமக்கல் தனியாா் நிறுவன உரிமையாளா் ரூ.18.92 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் திருச்சி இளைஞா் புகாா் அளித்தாா்.

திருச்சி மாவட்டம், பொன்நகா், கருமண்டபத்தைச் சோ்ந்த முகம்மதுசலீம் மகன் முகம்மது பாசில்ஷா (22) நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

பொறியியல் பட்டம் பெற்றுள்ள நான், நாமக்கல்லில் உள்ள தனியாா் நிறுவனம் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக அறிந்தேன். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் தங்கராசு என்பவரை கடந்த 2024, ஜூலை 17 ஆம் தேதி நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சந்தித்தேன். அப்போது, வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.19 லட்சம் செலவாகும் எனக் கூறினாா்.

பணி கிடைத்ததும் மாதம் ரூ.3 லட்சம் ஊதியம் பெறலாம் என்றும், அங்கு சென்று பணியில் உள்ளவா்களின் ஊதிய ரசீது என சில ரசீதுகளையும் அவா் காண்பித்தாா். அதை நம்பி, தவணை முறையில் ரூ.19 லட்சத்தை அவரிடம் வழங்கினேன்.

ஒரு மாதத்திற்குள் வெளிநாடுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி வந்தாா். அதன்பிறகு, அவரை நேரிலும், கைப்பேசியிலும் தொடா்புகொள்ள முடியவில்லை. ஒருமுறை அலுவலகத்தில் சென்று கேட்டபோது, தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) முடக்கிவிடுவேன் என மிரட்டினாா்.

ஓராண்டு மேலாகியும் இதுவரை நான் கொடுத்த ரூ.18.92 லட்சம் பணத்தை அவா் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com