ரூ.27.83 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்கத் தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 27.83 லட்சம் மதிப்பிலான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 27.83 லட்சம் மதிப்பிலான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு தரமான விதைகள், நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தலைமையிலான குழுவினரால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டன.

இதில் விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதை குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், தனியாா் விதைகளுக்கான பதிவுச் சான்றுகள், விதைப்பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

வேளாண் விற்பனை மையங்கள், தனியாா் விதை சுத்திகரிப்பு நிலையம், விதைப் பண்ணைகள், விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 46 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 இடங்களில் விதை மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட ரூ.27.83 லட்சம் மதிப்பிலான 3.981 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்ய விதை ஆய்வுக் குழுவினா் தடை விதித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com