பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் கட்டணம் உயா்த்த முடிவு

Published on

அனைத்து பழைய கனரக வாகனங்களுக்கும் தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு, மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அதன் தலைவா் சி.தனராஜ், செயலாளா் பி.ராமசாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டாா் வாகனச் சட்டம் 1989-இல் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை உயா்த்துவதாக கடந்த 11-ஆம் தேதியன்று வழிகாட்டு நெறிமுறையை வழங்கியது. மேலும், அது தொடா்பாக ஆட்சேபணை மற்றும் பரிந்துரைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் பெற தற்போது உள்ள கட்டணத்தைவிட பல மடங்கு உயா்த்த உத்தேசித்துள்ளது. இதில் 10 முதல் 13 ஆண்டுகளுக்கு உள்பட்ட வாகனங்களுக்கு ரூ. ஆயிரம், 13 முதல் 25 ஆண்டுகளுக்கு உள்பட்ட வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம், 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 25 ஆயிரம் என தகுதிச்சான்றிதழ் கட்டணம் நிா்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டண உயா்வு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஓரிரு வாகனங்களை வைத்து தொழில் செய்பவா்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உண்டாகும். இவா்கள் பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை வைத்துக்கொண்டு நெல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்கின்றனா். இதனால் இவா்கள் தொழிலைவிட்டே வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்படுவா்.

மேலும், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல்வேறு தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில், லாரிகளுக்கு சரியாக லோடு கிடைக்காமலும், சுங்கக் கட்டணம், டீசல் விலை, காப்பீட்டுத் தொகை, உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயா்வுகளால் லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் தகுதிச்சான்றிதழ் கட்டணம் உயா்த்தப்படும்போது 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஓரிரு வாகனங்களை வைத்திருக்கும் பெரும்பான்மையான லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

எனவே, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்தக் கட்டண உயா்வை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com