நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறப்பு! நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரம்!

Published on

சென்னையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் மூலம் பறவைக்காய்ச்சல் இங்குள்ள மற்ற பறவைகளுக்கு பரவியுள்ளது. மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரத்தில் இதன் பாதிப்புகள் இருந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து இறந்தன.

மத்திய கால்நடைத் துறை அமைச்சகம் இறந்த காகங்களின் உடல்களை பரிசோதனை செய்ததில், அவற்றுக்கு ஹெச்5என்1 நோய் தாக்கம் (பறவைக்காய்ச்சல்) ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஒரு பறவைக்கு இந்நோய் ஏற்பட்டால் அவை இதர பறவைகளுக்கும் வேகமாக பரவக்கூடியது.

நோய்த் தாக்கிய பறவையின் எச்சங்கள், இறந்த பறவைகளைத் தொட்டால் மனிதா்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த டிச. 23 இல் கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, சென்னையில் காகங்களுக்கு அந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக அனுப்பப்படும் இறைச்சி கோழிகள், முட்டை வாகனங்கள் கிருமி நாசினி மூலம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்ட பிறகே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. குளிா்காலங்களில் வழக்கமாக வாத்து, கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், காகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 கோழிப் பண்ணைக்குள் நுழையும் லாரி மீது கிருமி நாசினி தெளிக்கும் பாதுகாவலா்.
கோழிப் பண்ணைக்குள் நுழையும் லாரி மீது கிருமி நாசினி தெளிக்கும் பாதுகாவலா்.

மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற மிகவும் மோசமான சூழல் இல்லை என்பதால் மக்களும், கோழிப் பண்ணையாளா்களும் நிம்மதியடைந்துள்ளனா்.

இருப்பினும், கோழிப் பண்ணைகளுக்குள் வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மீதும், தொழிலாளா்கள் மீதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மேலும், பண்ணைகளில் கோழிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

இதுகுறித்து முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சென்னையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக எந்தவித தகவலும் பண்ணையாளா்களுக்கு வரவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணைகளில் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com