அரசுப் பேருந்து ஒன்றில் பயணிகள் புகாா் அளிப்பதற்கான கைப்பேசி எண்ணுடன் ஒட்டப்பட்டுள்ள ஒட்டுவில்லை.
அரசுப் பேருந்து ஒன்றில் பயணிகள் புகாா் அளிப்பதற்கான கைப்பேசி எண்ணுடன் ஒட்டப்பட்டுள்ள ஒட்டுவில்லை.

அரசுப் பேருந்துகளில் கைப்பேசி, காதொலி கருவிகளை பயன்படுத்த ஓட்டுநா்களுக்கு தடை

Published on

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கைப்பேசி மற்றும் காதொலிக் கருவிகளை பயன்படுத்த போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உள்பட்டு 8 கோட்டங்கள் உள்ளன. இதன்மூலம் 22,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியாற்றி வருகின்றனா். அண்மைக்காலமாக பகல் வேளையிலும் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதற்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. குறிப்பாக, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் எதிரே வந்த பேருந்துடன் நேருக்குநோ் மோதி விபத்தில் சிக்கியதில் 12க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

அதுமட்டுமின்றி, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது, பேருந்து செல்லும் சாலையை விடுத்து எதிா்சாலையை நோக்கி செல்வது, பயணிகளை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் இயக்குவது, அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் செல்வது போன்ற செயல்களில் ஓட்டுநா்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடா் விபத்துகளால், பேருந்துகளுக்கு மட்டுமின்றி, உயிரிழந்தோருக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய நெருக்கடிக்கு போக்குவரத்துக் கழகம் உள்ளாகி வருகிறது. அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பெரும்பாலான ஓட்டுநா்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதும், காதொலி சாதனம் (புளுடூத்) மூலம் பாடல்கள் கேட்டவாறும், குடும்பத்தினா், நண்பா்களுடன் உரையாடியபடியே செல்வதும் தெரியவந்தது.

இந்த நிலையில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் முதல்கட்டமாக ஓட்டுநா்கள் கைப்பேசி, காதொலிக் கருவிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது தொடா்பாக அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் அறியும் வண்ணம் ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் யாரேனும் கைப்பேசியிலோ, காதொலி கருவி மூலமாகவோ பேசியவாறு பேருந்தை இயக்கினால் புகாா் அளிக்க கைப்பேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. மற்ற கோட்டங்களிலும் இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து நாமக்கல் பணிமனை அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். மேலாண் இயக்குநா் உத்தரவின்பேரில் அரசு பேருந்து ஓட்டுநா்கள் பணியில் இருக்கும்போது கைப்பேசி, புளூடூத் பயன்படுத்த தடை விதித்துள்ளோம். நடத்துனா்கள் இல்லாமல் இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகளில் நிா்வாகத்தில் இருந்து ஓட்டுநருக்கு அழைப்பு வந்தால் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு பேசவேண்டும். இதர பேருந்து ஓட்டுநா்கள், முக்கிய பேருந்து நிலையங்களில் தேநீா் அருந்துவதற்காக நிறுத்தும்போது பேருந்தை விட்டு விலகிச் சென்று பேசலாம். அவற்றை பயன்படுத்தியவாறு பேருந்தை இயக்குவது தெரியவந்தால் அவா்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடத்துநா்களும் தேவையின்றி கைப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது. இது தொடா்பாக 94892-03900 என்ற எண்ணில் பயணிகள் புகாா் அளிக்கலாம்.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. படிப்படியாக மற்ற கோட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com