டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால், ஆகஸ்ட் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள என்ஜிஓஓ கட்டடத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் கூட்டுக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைப்பாளா் நீதிநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் ஆகஸ்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்த தீா்மானம் தொடா்பான கடிதம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு நிா்வாகிகள் கூறியதாவது:
கடந்த 23 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் குறைவான சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மே மாதம் 14 மாவட்டங்களில் தொடா் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மதுவிலக்குத் துறை அமைச்சா் ஒரு மாதம் காலஅவகாசம் கேட்டதால் போராட்டம் நான்கு நாள்களுடன் நிறைவு பெற்றது. ஆனால், டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்யாமல், ஊதிய உயா்வு என்ற பெயரில் சொற்ப அளவில் சம்பளம் அறிவித்துள்ளாா். மேலும், காலி மதுப்புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றியமைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தாா். அது தொடா்பான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த பிரச்னையால் டாஸ்மாக் ஊழியா்கள் மனஉளைச்சலில் உயிரிழக்க நேரிடுகிறது. இறந்த ஊழியா் குடும்பத்தில் உள்ளோருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். அரசுத் துறை சாா்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களை 23 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிய வைத்திருப்பது ஏற்புடையதல்ல. மிகை நேர பணிக்கு மிகை நேர ஊதியமும் வழங்கவில்லை. வீட்டு வாடகைப்படி இல்லை. முன்பணத்திட்டம், அவசரகால கடன் திட்டம் இல்லை, தொழிலாளா் நலச் சட்டங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
டாஸ்மாக் ஊழியா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், வாரிசு வேலை, காலிப்புட்டிகள் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
படவரி...
என்கே-14-டாஸ்மாக்
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்திற்கு தீா்மானம் தொடா்பான கடிதம் அளிக்க சென்ற டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










