திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கொல்லிமலையில் பயன்பாட்டுக்கு வந்தது இரவு வான்வெளி பூங்கா: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரவு வான்வெளி பூங்கா பயன்பாட்டுக்கு வந்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

News image
Updated On :8 மார்ச் 2026, 1:18 am IST

கொல்லிமலையில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரவு வான்வெளி பூங்கா பயன்பாட்டுக்கு வந்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குவது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இயற்கை எழில்சூழ்ந்த இம்மலைப் பகுதிகளைக் காண விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என்பது இங்குள்ள பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். ஏற்காட்டுக்கு இணையாக கொல்லிமலையை மாற்றவேண்டும் என இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போதைய ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரும், 2024-இல் வனத் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான மா. மதிவேந்தன், கொல்லிமலையில் ஒரு கோடி ரூபாயில் இரவு வான்வெளி பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, அதற்கான இடங்களை தோ்வுசெய்யும் பணியை வனத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனா்.

அந்தவகையில், கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் பாதையில் அரியூா்கஸ்பா பகுதியில் வான்வெளி பூங்கா அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ. 50 லட்சத்தில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

அங்கு பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற நிலையில், புது தில்லியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் வாங்கப்பட்ட நவீன தொலைநோக்கி கருவியை பொருத்தும் பணி நடைபெற்று திறப்பு விழாவுக்கு தயாரானது. இந்த நிலையில், அண்மையில் சென்னையில் இருந்து தற்போதைய வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் காணொலிக் காட்சி வாயிலாக இரவு வான்வெளி பூங்காவை திறந்துவைத்தாா்.

மேலும், தொலைநோக்கி நவீன கருவி செயல்பாடுகளையும் அவா் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். இரவு வான்வெளி பூங்கா பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து கொல்லிமலை வனத் துறையினா் கூறியதாவது: இரவு வான்வெளி பூங்கா சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரவு வான்வெளி பூங்காவானது, கொல்லிமலை செம்மேட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், சோளக்காட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆரியூா்கஸ்பா பகுதியில் உள்ளது. இது ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 13 லட்சத்தில் நவீன தொலைநோக்குக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

அந்த கருவி மூலம் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை அருகில் உள்ளதுபோல காணமுடியும். சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் வான் நட்சத்திரங்களையும், கோள்களையும் நவீன தொலைநோக்கி மூலம் அருகில் பாா்த்து ரசிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் இரவில் இங்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். வாகனம் வைத்திருப்போா் எளிதாக வந்து செல்கின்றனா். சாதாரண மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனா்.

Story image
Story image
Story image
Story image