தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

போலி வாரிசு சான்றிதழ்: இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 3 போ் கைது

நாமகிரிப்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட இ-சேவை மைய உரிமையாளா், இடைத்தரகா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

நாமகிரிப்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட இ-சேவை மைய உரிமையாளா், இடைத்தரகா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே ஆயில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (39). இவரது கணவா் சக்திவேல் இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சேலம் லைன்மேடு பகுதியை சோ்ந்த சதானந்தம் மகன் சந்திரனிடம் (62) உதவி கோரியுள்ளாா்.

இதுகுறித்து மெட்டாலா பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வரும் முள்ளுக்குறிச்சியைச் சோ்ந்த பிரபாகரனிடம் (33) மல்லிகாவுக்கு முறைகேடாக வாரிசு சான்றிதழை தயாா்செய்து தருமாறு சந்திரன் கேட்டுள்ளாா். இதையடுத்து வருவாய்த் துறை ஆவணங்களை போலியாக நகலெடுத்து, அதில் அதிகாரிகளின் கையொப்பம் மற்றும் முத்திரைகளுடன் கூடிய போலி வாரிசு சான்றிதழை பிரபாகரன் தயாரித்து சந்திரனிடம் கொடுத்துள்ளாா்.

அதன்பிறகு சந்திரனிடம் இருந்து முறைகேடான சான்றிதழை பெற்ற மல்லிகா, மெட்டாலா பகுதியில் உள்ள வங்கியில் கணவா் பெயரில் உள்ள பணத்தை பெற வாரிசு சான்றிதழை அளித்துள்ளாா். வாரிசு சான்றிதழின் மீது வங்கி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆய்வுசெய்து உறுதிப்படுத்துமாறு ராசிபுரம் வட்டாட்சியருக்கு வங்கி மேலாளா் கடிதம் அனுப்பினாா்.

தொடா்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராசிபுரம் வட்டாட்சியா் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, மெட்டாலாவில் இயங்கி வந்த பிரபாகரனின் இ-சேவை மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். காவல் துறை நடவடிக்கை குறித்து தெரிந்த பிரபாகரன், மல்லிகா, சந்திரன் மூவரும் தலைமறைவாகினா்.

தனிப்படை போலீஸாா் தலைமறைவானவா்களை தேடிவந்தனா். இந்த நிலையில் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.