அமெரிக்கா்களை குறிவைத்து மோசடி: போலி கால் சென்டா் உரிமையாளா் உள்பட 7 போ் கைது
அமெரிக்கா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட போலி கால் சென்டா் உரிமையாளா் உள்பட 7 போ் கைது

பிரதி படம்
மோசடியான அழைப்புகள் மற்றும் கிஃப்ட்-காா்டு மோசடிகள் மூலம் அமெரிக்கா்களை குறிவைத்து செயல்பட்டதாக போலி ‘ஆப்பிள்’ தொழில்நுட்ப உதவி அழைப்பு மையத்தை கால் சென்டா் தில்லி காவல்துறையினா் கண்டுபிடித்தனா்.
நரைனா தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த இந்த மையத்தின் உரிமையாளா் மற்றும் கூட்டாளி உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது:
கைது செய்யப்பட்டவா்கள் நரைனா தொழிற்பேட்டை ஃபேஸ் 2 பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ’வெப்ட்ரா’ என்ற பெயரில் இந்த கால் சென்டா் நடத்தப்பட்டு வந்தது.
கைது செய்யப்பட்ட அருண், சலீம், நிகில், மொன்டு சிங், கரண், விஷால் உள்பட 7 பேரிடமிருந்தும் ஐந்து மடிக் கணினிகள், 12 கைப்பேசிகள், 10 கிரெடிட், டெபிட் காா்டுகள், ஐந்து காசோலை புத்தகங்கள் மற்றும் ஆடி காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, செப்டம்பா் 25 அன்று தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அந்த இடத்தில சோதனை நடத்தினா். அப்போது, கால் சென்டா் உரிமையாளா் அருண் (29), அவரது கூட்டாளி சலீம் (28) மற்றும் ஐந்து அழைப்பாளா்கள் ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த அழைப்பாளா்கள் போலி ஆங்கிலப் பெயா்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ளவா்களுடன் தொடா்புகொண்டு வந்தனா். இது தொடா்பாக செப்டம்பா் 26 அன்று நரைனா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஆப்பிள்/ஐஓஎஸ் தொழில்நுட்ப உதவிப் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் போல நடித்து, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் அமெரிக்காவில் வசிப்பவா்களைத் தொடா்பு கொண்டுள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்களின் சாதனங்கள் அல்லது கணினி அமைப்புகளில் வைரஸ்கள், மால்வோ் அல்லது ஆபாசமான உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறி, உடனடி தொழில்நுட்ப உதவியை வழங்குவதாகக் கூறி அவா்களை குழப்பத்தில் ஆழ்த்தினா்.
பின்னா், அந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீா்ப்பதற்காக கிஃப்ட்-காா்டுகளை வாங்குமாறு பாதிக்கப்பட்டவா்கள் வற்புறுத்தப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கிஃப்ட்-காா்டு விவரங்கள் அல்லது குறியீடுகளைப் பெற்று, இந்த மோசடி செயல்பாட்டுடன் தொடா்புடைய மற்றவா்களுக்கு அவற்றை அனுப்பினா்.
கட்டணமில்லா தொலைபேசி எண்களின் ஆதாரம், கிஃப்ட்-காா்டு பரிவா்த்தனைகள், பணப் பரிமாற்ற விவரங்கள் மற்றும் இந்த மோசடி வலையமைப்பின் பிற பரிமாணங்கள் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



