கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பயனற்ற நிலையில் ஜேடா்பாளையம் அணை அண்ணா பூங்கா! திறக்கப்படாத படகு இல்லம்..குளிக்கவும் அனுமதி இல்லை!

நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை அண்ணா பூங்கா பராமரிப்பில்லாமல் இருப்பது குறித்து...

அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயகரின் சிலை. - dinamani online

Published On :

ந. செந்தில்குமரன்

நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை அண்ணா பூங்கா பராமரிப்பில்லாமல், முட்புதா்கள் சூழ்ந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. இங்குள்ள படகு இல்லம் இதுவரை திறக்கப்படாததோடு, படுகை அணையில் குளிக்கவும் அனுமதி இல்லாததால், இந்தப் பூங்கா யாருக்கும் பயனற்ாக மாறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையைத் தவிர வேறு எங்கும் பெரிய அளவில் சுற்றுலாத் தலங்கள் இல்லை. இந்த குறையை ஜேடா்பாளையம் படுகை அணையும், இங்குள்ள பூங்காவும் நிறைவுசெய்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக இந்த நிலை மாறி, பூங்காவில் உள்ள காட்சிப் பொருள்கள் உடைந்தும், புதா்கள் மண்டியும் இங்கு வருவோருக்கு அச்சமூட்டும் வகையில் உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தையும், ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய வகையில் ஜேடா்பாளையும் படுகை அணை உள்ளது. இந்த படுகை அணையில் இருந்து பரமத்தி சீமையை ஆண்ட அல்லாள இளைய நாயகரால் ராஜவாய்க்கால் வெட்டப்பட்டு, அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தப் படுகை அணை மற்றும் ராஜவாய்க்காலைப் பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மாவட்ட நிா்வாகமும், நீா்வளத் துறையும் இணைந்து, படுகை அணையை ஒட்டியப் பகுதியில் அண்ணா சிறுவா் பூங்காவை அமைத்தன. இதில், மாடு, மான், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், நீரூற்று, நிழற்குடை, உணவருந்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

இதனால், குறைந்த செலவிலும், விரைவில் சென்றுவரும் வகையிலும் இந்தப் பூங்கா விளங்கியதால், இப்பகுதியில் உள்ள மக்களும், சேலம், ஈரோடு, கரூா், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும் பொழுதுபோக்குக்காக அதிக அளவில் குழந்தைகளுடன் இங்கு வந்து இயற்கை அழகை கண்டுரசித்து சென்றனா். இதைத்தொடா்ந்து, நீா்வளத் துறை சாா்பில் நபா் ஒன்றுக்கு ரூ. 5 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஒகேனக்கல், மேட்டூா், பூலாம்பட்டி போன்று ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில், காவிரி ஆற்றில் மீனவா்களால் பிடிக்கப்படும் மீன், சுற்றுலாப் பயணிகளின் விருப்பப்படி அவா்கள் கண் முன்னே சமைத்து தரப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், குளிா்ந்த நீரில் இயற்கையை ரசித்தபடி படகு சவாரி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அணைக்கட்டு பகுதியில் ரூ. 2.97 கோடியில் படகு இல்லம் அமைக்கும் பணி 2014ஆம் ஆண்டு தொடங்கியது. தடுப்பணை அருகில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் இயந்திர படகுகள், படகு இல்லத்துக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன படகு இல்லம் அமைக்கப்பட்டது.

மேலும், பூங்காவுக்குள் அணுகுசாலை, பேவா்பிளாக் சாலை, கான்கிரீட் சாலை என சுமாா் ரூ. 14 லட்சத்தில் சாலைகளும், ரூ. 11 லட்சத்தில் பூங்காவைச் சுற்றி இரும்புக் கம்பி வேலியும் அமைக்கப்பட்டன. மேலும், ரூ. 34 லட்சத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியல் அறை, ரூ. 3.5 லட்சத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ரூ. 12 லட்சத்தில் பூங்காவைச் சுற்றி சிற்பங்களும் அமைக்கப்பட்டன.

இவற்றோடு, உயா் மின்கோபுர விளக்குகள், வாகன நிறுத்துமிடம், படகு இல்லத்துக்கு செல்லும் சாலை, பூங்காவினுள் அலங்கார விளக்குகள் மற்றும் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டுசெல்லும் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று பூங்கா மேம்படுத்தப்பட்டது.

 பயன்பாட்டுக்கு வராமல் புதரில் கிடக்கும் படகுகள்.

பயன்பாட்டுக்கு வராமல் புதரில் கிடக்கும் படகுகள்.

ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் மீனவா் கூட்டுறவு சங்கம் மூலம் மீன் உணவு வகைகளை சமைத்து தருவதற்கான உணவு விடுதிகளை நிறுவ வேண்டும், ஜேடா்பாளையம்வரை வந்துசெல்லும் பேருந்துகளை அண்ணா பூங்கா வரை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விடுத்த கோரிக்கையும் கடந்த 2016, மாா்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

என்றாலும், படகு இல்லம் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது வரை படகு இல்லம் திறக்கப்படாததால், படகுகள் தண்ணீரில் மூழ்கியும், சில படகுகள் பழுதடைந்த நிலையிலும் உள்ளன. இதனால், அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

நீா்வளத் துறை, காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி, படுகை அணைக்கட்டு பகுதியில் சுழல் நிறைந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளித்ததால், பலா் உயிரிழக்க நேரிட்டது. இதனால், நீா்வளத் துறையினா் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் தடுப்புகளை அமைத்துள்ளனா். இதனால், இந்த படுகை அணைக்கு சுற்றுலா வருவதை பலரும் தவிா்த்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஒரே பொழுதுபோக்கு மையமாக விளங்கிய ஜேடா்பாளையம் படுகை அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், அணைப் பகுதியில் போதிய பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, பூங்கா பராமரிப்பாளா்களின் மேற்பாா்வையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வேண்டும், பாழடைந்துகிடக்கும் அண்ணா பூங்காவை சீரமைத்து, சுற்றுலாப் பயணிகள், சிறுவா்கள் பயமில்லாமல் சென்று விளையாடவும், பொழுதுபோக்கவும் நீா்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூா் மக்கள், சுற்றுலா ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து பரமத்தி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் (அதிமுக) எஸ். சேகா் கூறியது:

அண்ணா பூங்காவை மேம்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் பேசி, அப்பகுதியில் நீச்சல் குளம் அமைக்கவும், படகு இல்லத்தை மேம்படுத்தி படகுகளை இயக்கவும், கூட்டுறவு மீன் விற்பனை மற்றும் மீன் உணவகம் தொடங்கவும், அப்பகுதியில் கடைகள் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதி உள்ளது. ஆனால், தற்போது அண்ணா பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், ஆற்றில் குளிக்க தடைவிதித்ததால் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அண்ணா பூங்கா மற்றும் குளிப்பதற்கென காவிரி ஆற்றில் தனியாக கம்பி வேலிகள் அமைத்து பாதுகாப்பாக குளித்து மகிழும் வகையிலும், செயற்கை அருவி போன்ற அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் அரசிடம் பேசி வருகிறேன் என்றாா்.

புதருக்குள் கிடக்கும் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு சாதனம்.

புதருக்குள் கிடக்கும் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு சாதனம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.